ஓஹியோவில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற வான்ஸ், விளம்பரத்தை விமர்சிக்கும் சொந்தக் கட்சியினரின் அணுகுமுறை தனக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில், விளம்பரம் சரியானதா, இல்லையா என்பது தனது முக்கியக் கவலை அல்ல என்றும், இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதே தனது நோக்கம் என்றும் கூறினார்.
“அரசியல் என்பது கடினமான தொழில்” என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட வான்ஸ், அமெரிக்காவுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் முன்னெடுக்க விரும்பும் நடவடிக்கைகளைக் காட்டிலும், இந்த விளம்பரத்தைப் பற்றி குடியரசுக் கட்சியினர் அதிகமாகப் புலம்புவதைப் பார்ப்பது தனக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாகக் கூறினார். இந்த விளம்பரச் சர்ச்சை குறித்து அவர் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறை.
தாயைக் கொண்டே மகளுக்கு எதிராக விளம்பரம்!
விவேக் ராமசாமி வெளியிட்டுள்ள 60 விநாடி விளம்பரத்தில், ஏமி ஆக்டனின் தாயான டோனா ஆர்தர் இடம்பெற்றுள்ளார். அதில், தனது மகள் பொய் சொல்வதாகக் குற்றம்சாட்டும் அவர், ஏமி ஆக்டனின் மனநலம் குறித்தும் மறைமுகமாகக் கேள்வி எழுப்புகிறார். இந்த விளம்பரம் வெளியானதும் ஜனநாயகக் கட்சியினர் மட்டுமின்றி, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஏமி ஆக்டன் ஓஹியோ மாகாணத்தின் முன்னாள் சுகாதாரத் துறை இயக்குநர் ஆவார். தனது குழந்தைப் பருவத்தில் வீடற்ற நிலை மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக அவர் ஏற்கெனவே வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பவமும் அவரது வாழ்க்கையின் முக்கியமான துயரமான பின்னணியாகக் கூறப்படுகிறது.
காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி, ஏமி ஆக்டனின் உயிரியல் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, அவரது வளர்ப்புத் தந்தை கிளெடித் ஆர்தர் 1978 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது 12 வயதாக இருந்த ஏமி ஆக்டனைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்தச் சம்பவங்கள் 1976 டிசம்பர் முதல் 1978 ஏப்ரல் வரை நடந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கைத் தொடர்ந்து டோனா ஆர்தர் தனது குழந்தைகளின் பாதுகாப்பு உரிமையை இழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1970-களின் இறுதியில் நீதிமன்றத்தில் தனது தாயைப் பார்த்ததற்குப் பிறகு அவரை மீண்டும் சந்திக்கவில்லை என்று ஏமி ஆக்டன் தெரிவித்துள்ளார்.
“நான் அந்த விளம்பரத்தை வெளியிட்டிருக்க மாட்டேன்!”
விவேக் ராமசாமியின் விளம்பரத்துக்கு எதிராகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஜே.டி. வான்ஸ் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் அவருடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட குடியரசுக் கட்சி செனட்டர் ஜான் ஹஸ்டெட், இந்த விளம்பரத்தைத் தான் வெளியிட்டிருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த அறிக்கையில், “நான் இந்த விளம்பரத்தை வெளியிட்டிருக்க மாட்டேன்” என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், வான்ஸ் மற்றும் விவேக் ராமசாமியுடன் ஒரே மேடையில் பங்கேற்றபோது அவர் இந்த விவகாரத்தை எழுப்பவில்லை.
ஜான் ஹஸ்டெட், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் செனட்டர் ஷெராட் பிரவுனை எதிர்த்து செனட் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த விளம்பரத்தை ஷெராட் பிரவுன் “அருவருப்பானது” என்று விமர்சித்திருந்தார்.
2024-ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வுப் போட்டியின்போது விவேக் ராமசாமியுடன் மோதிய நிக்கி ஹேலியும் அவரைக் கடுமையாகச் சாடியுள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், விவேக் ராமசாமியை மோசமான மனிதர் என்று விமர்சித்ததுடன், அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டும் தப்பித்துக்கொள்வது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.33 கோடிக்கு மேல் செலவிடத் திட்டம்!
தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த கோடீஸ்வரரான விவேக் ராமசாமி, சர்ச்சைக்குரிய விளம்பரத்தைத் தானே வெளியிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தனது சொந்தக் கட்சியினரிடமிருந்தே எதிர்ப்புகள் எழுந்துள்ளபோதிலும், அந்த விளம்பரத்தைப் பிரபலப்படுத்த 4 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிடப்போவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.33 கோடிக்கும் அதிகமாகும்.
தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே இருந்த நிலையில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. ஓஹியோ ஆளுநர் தேர்தல் அமெரிக்காவின் அதிகப் போட்டி நிறைந்த, அதிகச் செலவு செய்யப்படும் தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனால், விளம்பரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை தேர்தல் களத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
வான்ஸ் உரையாற்றுவதற்கு முன்பு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய விவேக் ராமசாமி, விளம்பரம் குறித்த சர்ச்சைக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
“குழந்தைப் பருவ துயரத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவது தவறு!”
இந்த விளம்பரத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவர்களில் 20 வயதான மைக்கேல் வெட்டிங்கும் ஒருவர். புதன்கிழமை வான்ஸ் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்த அவர், குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அங்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் தனது குடும்பத்தினரின் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலகி, ஆளுநர் தேர்தலில் ஏமி ஆக்டனுக்கு வாக்களிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
விவேக் ராமசாமியை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் கூட்டத்துக்கு வந்ததாகக் குறிப்பிட்ட மைக்கேல், அந்த விளம்பரத்தைப் பார்த்தபோது மிகவும் அருவருப்பாக உணர்ந்ததாகத் தெரிவித்தார்.
“அவர் குழந்தையாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார். அதை ஒரு விளம்பரத்தில் பயன்படுத்துவது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று எனக்குத் தோன்றியது. குழந்தைப் பருவத்தில் அவர் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தலை இப்படிப் பயன்படுத்துவதோ, அதற்குப் பிரசார மேடை அமைத்துக் கொடுப்பதோ சரியல்ல” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, ஏமி ஆக்டனின் தேர்தல் பிரசாரக் குழு, அவரது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட துயரங்களே ஆளுநர் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான முக்கியக் காரணம் அல்ல என்று தெரிவித்துள்ளது. வான்ஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் விரிவான பதிலளிக்கவில்லை. தனது குழந்தைப் பருவத்தில் கூடாரத்தில் தங்கியிருந்தது மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டது குறித்த ஏமி ஆக்டனின் வாக்குமூலத்துக்கு ஆதரவாக, அவரது சகோதரர் இடம்பெற்ற வீடியோ ஒன்றையும் பிரசாரக் குழு வெளியிட்டுள்ளது.
மேலும், பிரசாரக் கூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், ஏமி ஆக்டன் தனது அரசியல் நிலைப்பாடுகள் அனைத்திலும் பொய் சொல்வதாகக் குற்றம்சாட்டினார்.
ஓஹியோ ஆளுநர் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த விளம்பரம், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவது சரியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. விவேக் ராமசாமிக்கு எதிராக அவரது சொந்தக் கட்சியினரிலேயே எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், ஜே.டி. வான்ஸ் அவர்களை விமர்சித்திருப்பது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









