6 மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடையா? நெஸ்லே செரிலாக் சர்ச்சைக்குப் பிறகு FSSAI முன்மொழிந்துள்ள புதிய விதி என்ன, இனி குழந்தைகளின் உணவில் என்ன மாற்றம் வரப்போகிறது?
6 மாதக் குழந்தைகளுக்கான உணவில் என்ன மாற்றம்?
இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை ஒழுங்குபடுத்தும் FSSAI, 2019-ம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள்) விதிகளில் திருத்தம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய விதிகளின்படி, குழந்தைகளுக்கான உணவுகளில் லாக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் பாலிமர்கள் போன்ற கார்போஹைட்ரேட் மூலப்பொருட்களைப் பயன்படுத்த அனுமதி உள்ளது. அவை மொத்த கார்போஹைட்ரேட் அளவில் 20 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளது.
இந்நிலையில், புதிய வரைவு அறிவிப்பில், 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் பொருட்களில் சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ் போன்ற இனிப்பூட்டிகளைச் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையைச் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆறு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கான ஃபார்முலா உணவுகளில் கூடுதலாகச் சேர்க்கப்படும் குறிப்பிட்ட சர்க்கரைகளுக்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், இந்த மாற்றம் தற்போது முன்மொழிவாகவே உள்ளது. பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஆட்சேபனைகள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைத் தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
6 முதல் 24 மாதக் குழந்தைகளுக்கு அனுமதி இருக்குமா?
இந்த முன்மொழிவு அனைத்து குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களிலும் சர்க்கரையை முற்றிலும் தடை செய்வதாகப் பொருள் கொள்ளக் கூடாது.
தற்போதைய வரைவு அறிவிப்பின்படி, ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் பொருட்களில்தான் சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ் போன்ற இனிப்பூட்டிகளைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஆறு மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான பொருட்களில், தற்போதைய விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இவற்றைப் பயன்படுத்துவது தொடரலாம்.
எனினும், இறுதி விதிகள் வெளியிடப்பட்ட பின்னரே இந்த மாற்றங்களின் முழுமையான நடைமுறை தெளிவாகும்.
முதல் 6 மாதங்கள் ஏன் இவ்வளவு முக்கியம்?
குழந்தையின் வாழ்க்கையில் முதல் ஆறு மாதங்கள், உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான மேம்பாட்டுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும்.
இதைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே கூடுதல் சர்க்கரை கிடைப்பதைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதற்கும் உதவும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை ஊக்குவிப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்றாகும்.
குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உணவுப் பொருட்களைத் தயாரிக்குமாறு நிறுவனங்களையும் இந்த முன்மொழிவு ஊக்குவிக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நெஸ்லே தயாரிப்புகள் தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுவது ஏன்?
குழந்தைகளுக்கான உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை தொடர்பான விவாதம் தற்போது தொடங்கியது அல்ல.
2024-ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பொதுநல அமைப்பான Public Eye நடத்திய ஆய்வு, உலகளாவிய உணவு மற்றும் பான நிறுவனமான நெஸ்லே விற்பனை செய்த குழந்தைகளுக்கான சில உணவுப் பொருட்களில், ஐரோப்பியச் சந்தைகளுடன் ஒப்பிடும்போது தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கச் சந்தைகளில் கூடுதல் சர்க்கரை அதிகமாக இருந்ததாகக் குறிப்பிட்டது.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஆறு மாதக் குழந்தைகளுக்கான நெஸ்லே செரிலாக் தயாரிப்பில், ஒரு பரிமாறலுக்கு 2.7 கிராம் கூடுதல் சர்க்கரை இருந்ததாக அந்த ஆய்வு தெரிவித்தது. அதே தயாரிப்பு இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படாமல் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த ஆய்வு குழந்தைகளுக்கான உணவுகளில் சர்க்கரை சேர்க்கப்படுவது தொடர்பாகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கான ஃபார்முலா உணவுகளில் கூடுதல் சர்க்கரை இருப்பது குறித்து ஆய்வு செய்யும் நடவடிக்கைகளையும் FSSAI மேற்கொண்டது.
தற்போதைய முன்மொழிவு, குழந்தைகளின் உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்படுவது தொடர்பான கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
கூடுதல் சர்க்கரை குழந்தைகளுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
பழங்கள், பால் போன்ற இயற்கை உணவுகளில் காணப்படும் சர்க்கரைக்கும், உணவுப் பொருட்களைத் தயாரிக்கும்போது தனியாகச் சேர்க்கப்படும் சர்க்கரைக்கும் வேறுபாடு உள்ளது.
சிரப் உள்ளிட்ட இனிப்பூட்டிகள் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரையே பொதுவாகக் கூடுதல் சர்க்கரை எனப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு (WHO), இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவில் கூடுதல் சர்க்கரையை அறிமுகப்படுத்துவதைத் தவிர்க்கும் வகையிலான வழிகாட்டுதல்களை வலியுறுத்துகிறது.
குழந்தைப் பருவத்தில் அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளும் பழக்கம், பின்னாளில் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஆபத்துக் காரணியாக இருக்கலாம். அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வது பற்சிதைவுக்கும் வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளின் உணவில் சர்க்கரையைக் குறைப்பதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு மத்தியில், FSSAI-யின் இந்த முன்மொழிவு கவனம் பெற்றுள்ளது.
இறுதி அறிவிப்பு வெளியான பிறகு, குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு முறைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம். அதேசமயம், குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் இந்த விதிமுறைகள் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.
LIVE 24 X 7









