செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில், விசாரணை அதிகாரம் மாற்றப்பட்டு சிபிசிஐடி காவல்துறை தனது விசாரணையை இன்று தொடங்கியுள்ளது.
சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளர் கீதா மற்றும் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான சிறப்புக் குழுவினர் இந்தச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சிறுமி மாயமாகி இன்றோடு 11 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவரைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.
முதலமைச்சர் தன் Reels மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
LIVE 24 X 7









