அரசியல்

‘Virtual வாரியர்ஸ்’ Vs மேயர் பிரியா.. AI வீடியோ சர்ச்சையால் வெடித்த அரசியல் மோதல்!

சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் வீடியோக்கள் வெளியிடப்படுவதாகவும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.

‘Virtual வாரியர்ஸ்’ Vs மேயர் பிரியா.. AI வீடியோ சர்ச்சையால் வெடித்த அரசியல் மோதல்!

இது தொடர்பாக இன்று (அக்.21) அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்ததுடன், தமிழ்நாடு அரசையும் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.



அரசியல் விமர்சனத்துக்குப் பிறகு வீடியோக்களா?

2022-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்றது முதல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தனக்கு உறுதுணையாக இருந்ததாகப் பிரியா தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மேயராகவும் பெண்ணாகவும் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது மாநகராட்சிப் பணிகள் ரத்து செய்யப்படுவது, நிறுத்தி வைக்கப்படுவது, தேவையான நிதி ஒதுக்கப்படாதது உள்ளிட்ட விவகாரங்களில் திமுக சார்பில் அரசுக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்து வருவதாகக் கூறினார்.

இந்தச் சூழலில், தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசும் ஒவ்வொரு முறையும், அடுத்த நாளே சமூக வலைத்தளங்களில் தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் வீடியோக்கள் வெளியிடப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Instagram, Facebook, X உள்ளிட்ட தளங்களில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோக்கள் எடிட் செய்யப்படுவதாகவும், கட்சியைச் சேர்ந்தவர்களுடன் தன்னைத் தவறாகத் தொடர்புபடுத்தும் வகையில் அவை வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

போலீசில் புகார்.. நடவடிக்கை இல்லையா?

இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஏற்கெனவே புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பிரியாவின் முக்கியக் குற்றச்சாட்டு.

தற்போதும் தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளதாகவும், இது தொடர்பாக மீண்டும் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இதற்காவது தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து பேசும் அரசு, தன்னைப் போன்ற ஒரு பெண் மக்கள் பிரதிநிதி அளிக்கும் புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே அவரது வாதமாக உள்ளது.

இது தவெக அரசின் வியூகமா?

தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் செயல்களுக்குப் பின்னால் 'விர்ச்சுவல் வாரியர்ஸ்' எனக் குறிப்பிடப்படும் சமூக வலைத்தளக் குழுக்கள் இருப்பதாகப் பிரியா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தவெக நிர்வாகிகள் தவறு செய்ததாகக் கூறப்படும் சம்பவங்களில் முதலமைச்சரோ அமைச்சர்களோ கண்டனம் தெரிவித்துள்ளார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் இதுபோன்ற செயல்கள், அரசியலுக்கு வர விரும்பும் பெண்களிடையே அச்சத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அரசியலில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு?

திமுக ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரியா, தற்போதைய அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து பேசியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோரின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மக்களுக்கான பணிகளைச் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேயர் பிரியாவின் இந்தப் புகாருக்கு தமிழ்நாடு அரசு என்ன பதில் அளிக்கப்போகிறது? சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்கள் தொடர்பாகக் காவல்துறை அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்விகள்.