தமிழ் சினிமாவில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தனது இயல்பான நடிப்பு மற்றும் நடனத் திறமையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சமீபகாலமாகத் தனுஷின் பெயர் அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்டு வருகிறது. அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய், அரசியலில் களமிறங்கியதைத் தொடர்ந்து, மற்ற நடிகர்களும் அரசியல் பாதையை நோக்கி நகர்கிறார்களா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தப் பின்னணியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் பெயர்களும் அவ்வப்போது பேசப்பட்டு வருகின்றன.
ரசிகர் மன்றக் கொடி முதல் நலத்திட்ட உதவிகள் வரை!
தனுஷின் ரசிகர் மன்றச் செயல்பாடுகளும் தற்போது அரசியல் பார்வையுடன் கவனிக்கப்படத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தினர் தங்களது நற்பணிகளுக்காகச் சிவப்பு, வெள்ளை நிறங்களைக் கொண்ட கொடியைப் பயன்படுத்துவது குறித்துப் பேசப்பட்டது. அந்தக் கொடி அரசியல் கட்சியின் கொடியைப் போல இருப்பதாகச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.
ஆனால், இந்தக் கொடி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களது மன்றத்தில் பயன்பாட்டில் இருப்பதாக ரசிகர் மன்றத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், தனுஷின் ரசிகர் மன்றச் செயல்பாடுகள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.
திருவள்ளூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய கருத்துகளும் இந்த விவாதங்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. ரசிகர்கள் ஒற்றுமையாக இருப்பதன் பின்னால் ஒரு பெரிய சக்தி இருப்பதாகவும், அந்தச் சக்திக்கு ஓர் அர்த்தத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கருத்துகள், ரசிகர் மன்றத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பின.
மேலும், தான் படித்த சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா பள்ளிக்குத் தனுஷ் சொந்தச் செலவில் மூன்று தளங்களைக் கொண்ட புதிய கட்டடத்தைக் கட்டிக்கொடுத்ததாக வெளியான செய்திகளும் கவனம் பெற்றன. இதுபோன்ற சமூக நலப் பணிகளும் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகளும் அரசியல் வருகை குறித்த விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன.
‘தமிழக எழுச்சிக் கழகம்’... உண்மை என்ன?
இதற்கிடையில், தனுஷின் பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும், அந்தக் கட்சிக்கு ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவின.
தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் அவரது அரசியல் வருகை குறித்துக் கேட்கப்பட்டபோது, அது தனுஷின் தனிப்பட்ட முடிவு என்ற வகையில் அவர் கருத்து தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனால், தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் மேலும் கவனம் பெற்றன.
திடீர் டெல்லி பயணம்... அடுத்து என்ன?
தனுஷ் நேற்று (அக்.,-19) திடீர் பயணமாக டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றன. அங்கு அவர் முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஏற்கெனவே அரசியல் கட்சி தொடங்குவது குறித்துப் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், டெல்லி பயணமும் கூடுதல் கவனத்தைப் பெற்றது. இருப்பினும், இந்தப் பயணத்தை அரசியல் நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புபடுத்துவதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஞாயிற்றுக்கிழமை மகளிரணி நிர்வாகிகளுடன் சந்திப்பு?
இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளைச் சந்திக்க நடிகர் தனுஷ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்பின்போது மகளிரணி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதுடன், மகளிரணியை வலுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளிலும் அவர் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு, நலத்திட்ட உதவிகள், தனுஷின் பேச்சுகள், டெல்லி பயணம் என அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அவரது அடுத்தகட்ட நகர்வு குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? விஜய்க்குப் போட்டியாகக் களமிறங்குகிறாரா? அவரது ரசிகர் மன்றச் செயல்பாடுகள் எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாறுமா? என்ற கேள்விகளுக்கு, அடுத்தடுத்த நிகழ்வுகளே பதிலளிக்கும்.
LIVE 24 X 7









