தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அக்கட்சியின் தொகுதி பொறுப்பாளர் சஞ்சய்காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கைதுகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிட கட்சிகள் செய்தவையே தவெக செய்கிறது
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்காகக் காவல்துறை மற்றும் சட்ட நடவடிக்கைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். முந்தைய ஆட்சிகளில் திராவிடக் கட்சிகள் செய்ததாகத் தாம் விமர்சித்த தவறுகளையே தற்போதைய தவெக அரசும் தொடர்ந்தால், அதை நல்லாட்சி என்று எவ்வாறு அழைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரைக் கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் நோக்கத்துடன் பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கும் அரசியல் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரானவை என்றும் விமர்சித்துள்ளார்.
"எந்த ஆட்சியும் என்றென்றும் நிலைத்திருக்காது" - சீமான்
தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த சீமான், அதிகாரம் என்பது நிரந்தரமானது அல்ல என்றும், எந்த ஆட்சியும் என்றென்றும் நிலைத்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியும் அதிகாரமும் முடிவுக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை எனக் கூறிய அவர், ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதம் குறித்து எச்சரிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
எக்ஸ் தள பதிவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது எக்ஸ் தள பதிவில் ,
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்.
தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே?
மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?
நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா?
திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே!
உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
என பதிவிட்டுள்ளார் .
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கைது செய்யப்பட்டிருப்பதும், அவருடன் கட்சிப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருப்பதும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அதிகாரப்பூர்வ விளக்கங்கள் கவனத்தைப் பெற்றுள்ளன.
LIVE 24 X 7









