அரசியல்

தனுஷின் அரசியல் ENTRY.. எல்லாருக்கும் விஜய்யை தான் INSPIRATION.. மெச்சிக் கொள்ளும் தவெகவினர்!

தனுஷின் ரசிகர் மன்றப் பெயர் மாற்றத்தை வரவேற்றுள்ள தவெகவினர், சினிமா உலகிலிருந்து முதலமைச்சர் நாற்காலி வரை விஜய் கடந்து வந்த 30 ஆண்டுகால களப்பணி மற்றவர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தனுஷின் அரசியல் ENTRY.. எல்லாருக்கும் விஜய்யை தான் INSPIRATION.. மெச்சிக் கொள்ளும் தவெகவினர்!
Dhanush

நடிகர் தனுஷ் அரசியலுக்குள் நுழையப் போவதாகத் தகவல்கள் தீயாய் பரவி வரும் நிலையில், சினிமா உலகிலிருந்து முதல்வர் நாற்காலி வரை விஜய் கடந்து வந்த பாதை பலருக்கும் ஒரு புதிய இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளதாகவும் அதனை வரவேற்பதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் நடைபெற்ற பிரம்மாண்டக் கூட்டத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக 'தனுஷ் நற்பணி இயக்கம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் தனுஷ் நேரில் பங்கேற்கவில்லை என்றாலும், ஒழுக்கம் மற்றும் சமூகப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. எனினும், தனது அரசியல் பிரவேசம் குறித்து தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்துத் தவெக தரப்பில் கூறுகையில், தனுஷின் இந்த நகர்வு அரசியலுக்கு வருபவர்களுக்கான ஒரு தொடக்கமாக அமைவதில் மகிழ்ச்சி என்றாலும், விஜய் இந்த உயரத்தை அடைய சுமார் 30 ஆண்டுகள் கடுமையான களப்பணியாற்றியுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது. எந்தக் கட்சியும் எளிதாகத் தொடங்கிவிடலாம், ஆனால் மக்களிடையே தொடர்ந்து நிலைத்து நிற்பதே மிக முக்கியம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தனது திரைவாழ்க்கையின் உச்சக்கட்ட புகழில் இருந்தபோதே, சினிமா உலகிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியலில் களமிறங்கினார் விஜய் என்பதையும் அவர்கள் நினைவூட்டுகின்றனர்.

தேர்தல் அரசியலில் நேரடியாகக் குதிப்பதற்கு முன்பு, விஜய் தனது ரசிகர் மன்றத்தை ஒரு வலுவான நற்பணி இயக்கமாக மாற்றினார். ஏழை எளியோருக்கு இலவச உணவு, நூலகங்கள் நிறுவுதல் மற்றும் சட்ட உதவிகள் வழங்குவது எனத் தொடர்ந்து மக்கள் பணியாற்றியதன் விளைவாகவே தவெக என்னும் பிரம்மாண்ட கட்சி உருவாக அடித்தளம் அமைந்தது. தற்போது தனுஷின் ரசிகர் மன்றமும் அதே பாணியில் கட்டமைக்கப்பட்டு வருவதால், அரசியல் வட்டாரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மண்ணைப் பொறுத்தவரை சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையேயான பந்தம் எப்போதுமே தனித்துவமானது. அண்ணாதுரை, கருணாநிதி தொடங்கி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் தற்போது விஜய்யும் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார். அதேசமயம், சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் என எ எவ்வளவோ உச்ச நட்சத்திரங்கள் அரசியலுக்கு வந்தாலும் உச்ச பதட்டத்தை எட்ட முடியவில்லை; ரஜினிகாந்தோ தனது முடிவை பாதியிலேயே கைவிட்டார்.

தனுஷின் இந்த அமைப்பு ரீதியான பெயர் மாற்றம் இப்போதைக்கு ஒரு சாதாரண நடவடிக்கையாகத் தோன்றினாலும், தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நட்சத்திரமும் அதே ராஜபாட்டையைத் தேர்ந்தெடுக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பை இப்போதே அரசியல் களத்தில் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.