உலகம்

கட்டிப்பிடிச்சது ஒரு குத்தமா? HUG-ஆல் வந்த வினை.. வலியால் துடித்த மனைவி!

அன்பாகக் கட்டியணைக்கும்போது நடந்த எதிர்பாராத விபத்து குறித்த தகவல் சீன சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கட்டிப்பிடிச்சது ஒரு குத்தமா? HUG-ஆல் வந்த வினை.. வலியால் துடித்த மனைவி!
five broken ribs

சீனாவில் வசிக்கும் நபர் ஒருவர், தன் மனைவி மீது கொண்ட அளப்பரிய அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரை மிகவும் இறுக்கமாகக் கட்டியணைத்துள்ளார். ஆனால், அந்தத் தழுவலுக்குப் பிறகு மனைவியால் நிமிர்ந்து நிற்கக்கூட முடியாத அளவுக்கு நெஞ்சில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரது ஐந்து விலா எலும்புகள் உடைந்திருப்பதும், மற்றொரு எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்தத் திடீர் விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், தன் மனைவியின் மீது அன்பை காட்டவே இறுக்கமாகக் கட்டிப்பிடித்ததாகவும், அது இவ்வளவு பெரிய காயத்தை ஏற்படுத்தும் என்று தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறி மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.

திடீரெனத் தூக்குவதோ அல்லது பின்னால் இருந்து பலமாக அழுத்திப் பிடிப்பதோ நெஞ்சுப் பகுதியில் சீரற்ற அழுத்தத்தை உண்டாக்கும் என்றும், அதுவே விலா எலும்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மனித உடலின் 5 முதல் 8 வரையிலான விலா எலும்புகள் அதிக வளைவுத் தன்மையைக் கொண்டவை என்பதால், அவற்றின் மீது திடீரெனப் பலமான வெளிப்புற அழுத்தம் கொடுக்கப்படும்போது எளிதில் முறிய வாய்ப்புள்ளது.

இதற்காகக் அன்றாட வாழ்வில் கட்டிப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டியதில்லை என்றும், அதேநேரம் மற்றவர்களைக் கட்டியணைக்கும்போது அல்லது தூக்கும்போது கொடுக்கும் அழுத்தத்தின் அளவைக் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.