நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர் 2' திரைப்படம் கடந்த 15 அன்று வெளியாகி, உலக அளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் சாதனையைப் படைத்துள்ளது. இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இருந்தே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வரும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்குத் திரைகளும் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் சில மணிநேரங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு சாதனையைப் படைத்துள்ள நிலையில், படக்குழுவினருக்குப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இப்படத்தில் 'பழக்கடை மூர்த்தி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார் நடிகர் நமோ நாராயணா. படத்தில் இவரது காமெடி கலந்த வில்லத்தனமும், அப்பாவித்தனமான நடிப்பும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சமூக வலைதளங்களிலும் இவரது மீம்ஸ்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. 2009-ல் 'நாடோடிகள்' படம் மூலம் அறிமுகமாகி ஈசன், போராளி, விஸ்வாசம், ராயன் உட்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், ஜெயிலர் 2 இவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், நமோ நாராயணனைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நடிகரும் இயக்குநருமான சசிகுமார், ஜெயிலர் 2 படக்குழுவைப் பாராட்டிப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சூப்பர் ஸ்டார் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான். இயக்குநர் நெல்சன் மற்றும் ஜெயிலர் 2 படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல்" எனப் பதிவிட்டுள்ளார்.
முந்தைய பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநர் நெல்சன், அனிருத் ஆகியோருக்குச் சொகுசுக் கார்களைப் பரிசளித்த நிலையில், இரண்டாம் பாகத்தின் வெற்றிக்குப் பின் சசிகுமாரின் இந்த ஜாலியான பதிவு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
LIVE 24 X 7









