பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியது போன்ற புகைப்படங்கள் அமெரிக்க நீதித்துறை மூலம் வெளியாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தீவிர கேள்விகளை எழுப்பி வருகின்றன.
அமெரிக்காவில் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களும் படங்களும் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெயர் இடம்பெற்றிருந்தது ஏற்கனவே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த பிப்ரவரியில் விளக்கம் அளித்த ஹர்தீப் சிங் பூரி, தான் சர்வதேச அமைதி தூதுக் குழுவின் மூலமே எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும், எப்போதுமே அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், தற்போது ஒரு மூடிய அறையில் இருவரும் தனிப்பட்ட முறையில் பல கோணங்களில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்துக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் மற்றும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். எப்ஸ்டீனைத் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் சந்திக்கவில்லை என்று அமைச்சர் கூறிவிட்டு, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதற்கு மாறாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், மிகக் கொடூரமான குற்றங்களைப் புரிந்த நபருடன் அமைச்சர் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியிருப்பது அருவருப்பை ஏற்படுத்துவதாகவும், இதுகுறித்துப் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்துள்ள நிலையில், சரியாக இந்த நேரத்தில் இந்தத் புகைப்படங்கள் வெளியாகியிருப்பது அரசியல் களத்தில் கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சி நடந்து வரும் வேளையில், இந்தத் தகவல்களை வெளியிட்டு அமெரிக்கா இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முயல்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்ஸ்டீனுடனான சந்திப்பு குறித்த விளக்கத்தை அமைச்சர் தரப்பு முன்பு அளித்திருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படங்கள் மத்திய அரசுக்கு எதிரான விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
LIVE 24 X 7









