இந்தியா

என்னது BISCUT-ல மாட்டு தீவனமா ! பால்-ல DETERGENT-ஆ ! 3 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை !

பிஸ்கட், பால், உலர் பழங்கள் தொடர்பாக ஆய்வில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று நிறுவனங்கள் மீது FSSAI அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

என்னது BISCUT-ல மாட்டு தீவனமா ! பால்-ல DETERGENT-ஆ !  3 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை !
FSSAI Action Against 3 Food Companies !

PRIYAGOLD பிஸ்கட் தயாரிப்பில் கால்நடைத் தீவனத்துக்கான தவிடு பயன்படுத்தப்பட்டதாகப் புகார்; DODLA DAIRY பாலில் டிடர்ஜென்ட், காஸ்டிக் சோடா; மஞ்சள் திராட்சையில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் – உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, மூன்று நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான SURYA FOOD & AGRO, பால் உற்பத்தி நிறுவனமான DODLA DAIRY மற்றும் UEIR Organic Foods ஆகிய நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் புகார், அதிகாரிகளின் ஆய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது.

PRIYAGOLD பிஸ்கட்டில் கால்நடைத் தீவனத் தவிடு?

PRIYAGOLD பிஸ்கட்களைத் தயாரிக்கும் SURYA FOOD & AGRO நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தில் FSSAI அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மனிதர்கள் உண்பதற்காக அல்லாமல் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்பட வேண்டிய தவிடு, பிஸ்கட் தயாரிப்பில் நார்ச்சத்துக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆய்வின்போது, கால்நடைகளின் பயன்பாட்டுக்கானவை எனக் குறிப்பிடப்பட்டிருந்த சாக்குப் பைகளில் இந்த மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உற்பத்தி நிலையத்தின் சுகாதாரம், பூச்சிக் கட்டுப்பாடு, மூலப்பொருட்களைச் சேமித்து வைக்கும் முறை, மூலப்பொருட்களைத் தனித்தனியாகப் பராமரித்தல், பணியாளர்களின் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் உற்பத்திப் பகுதிகளின் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களிலும் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக FSSAI கூறியுள்ளது.

இந்தக் குறைபாடுகளின் அடிப்படையில், ஏற்கெனவே SURYA FOOD & AGRO நிறுவனத்தின் உரிமத்தை FSSAI இடைநீக்கம் செய்திருந்தது. தற்போது, உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது.

DODLA DAIRY பாலில் டிடர்ஜென்ட், காஸ்டிக் சோடா?

பால் தரம் தொடர்பான மற்றொரு விவகாரத்தில் DODLA DAIRY நிறுவனத்துக்கு எதிராகவும் FSSAI நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நிறுவனத்தின் ஃபுல் கிரீம் பால் மாதிரியை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். முதற்கட்டப் பரிசோதனையில், பாலில் இருக்க வேண்டிய கொழுப்புச் சத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கு ஏற்ப இல்லை எனக் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நிறுவனத்தின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து அந்தப் பால் மாதிரி மேல்முறையீட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பாலில் டிடர்ஜென்ட் மற்றும் காஸ்டிக் சோடா இருப்பதாகவும், பாலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவைவிடக் குறைவாக இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டதாக FSSAI தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் DODLA DAIRY நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மஞ்சள் திராட்சையில் பூச்சிக்கொல்லி எச்சங்கள்!

UEIR Organic Foods நிறுவனத்தின் மஞ்சள் திராட்சை மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் கண்டறியப்பட்டதாக FSSAI தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவுகளை மீறிய பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது உணவுப் பாதுகாப்பு தொடர்பான கவலையை ஏற்படுத்தும் நிலையில், இந்த விவகாரத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.



உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள்; FSSAI நடவடிக்கை!

பிஸ்கட் தயாரிப்பில் கால்நடைத் தீவனத்துக்கான தவிடு பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்ட விவகாரம், பாலில் டிடர்ஜென்ட் மற்றும் காஸ்டிக் சோடா இருப்பதாகக் கூறப்படும் விவகாரம், மஞ்சள் திராட்சையில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் கண்டறியப்பட்ட விவகாரம் என மூன்று வெவ்வேறு வழக்குகளில் FSSAI நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட விதிமீறல்கள் தொடர்பாக சட்ட நடைமுறைகள் தொடர்ந்து நடைபெறும்.

உணவுப் பொருட்களின் தரம், உற்பத்தி நிலையங்களின் சுகாதாரம் மற்றும் நுகர்வோரின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான கண்காணிப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.