அக்டோபர் 28-ஆம் தேதி கெடு!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கானின் உறவினரான நடிகர் இம்ரான் கான், மும்பையின் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இம்ரான் கான் இந்தியக் குடிமகன் அல்ல என்பதைக் குறிப்பிட்டு, குடியேற்றச் சட்டம் தொடர்பான விதிகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மும்பை காவல்துறை காலக்கெடு விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கக் குடியுரிமை… என்ன பின்னணி?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இம்ரான் கான், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்றும், அவரிடம் வெளிநாட்டு இந்தியக் குடிமகன் (OCI) அட்டை இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஒரு பேட்டியில், இந்தியக் குடியுரிமையைப் பெற முயற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்திருந்ததாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதற்கிடையே, பாஜக தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கிரீட் சோமையா, இம்ரான் கான் அமெரிக்கக் குடிமகன் என்பதால், இந்தியாவில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டத்தில் பங்கேற்ற மனைவி லேகா வாஷிங்டன்!
இம்ரான் கானின் மனைவி லேகா வாஷிங்டன் தமிழ் சினிமாவில் ‘ஜெயம் கொண்டான்’, ‘வா குவாட்டர் கட்டிங்’, ‘கல்யாண சமையல் சாதம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, நடிகர் இம்ரான் கானுக்கு இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.
LIVE 24 X 7









