உலகம்

"எங்கிட்ட இதெல்லாம் கேக்காதீங்க.." டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த சுந்தர் பிச்சை!

அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றம் செய்ய தான் வாய்த்த கோரிக்கையை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நிராகரித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


Donald Trump and Sundar Pichai

அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை 'டிரம்ப் பெருங்கடல்' என மாற்றும் தனது யோசனைக்கு கூகுள் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை சம்மதிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தென் கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை கூகுள் மேப்ஸில் மாற்றுவது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையிடம் தான் பேசியதாகக் கூறினார். அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்ற முடியுமா என்று அவரிடம் கேட்டபோது, "பெருங்கடல்கள் என்பவை பல நாடுகளை உள்ளடக்கியவை; எனவே அப்படி செய்யுமாறு எங்களைக் கேட்காதீர்கள்" என்று சுந்தர் பிச்சை கேட்டுக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சையின் இந்த பதிலைத் தொடர்ந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்குப் பெயர் வைக்கும் திட்டத்தைக் கைவிட உள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், அடுத்ததாக பசிபிக் பெருங்கடலை 'அமெரிக்கப் பெருங்கடல்' என அழைக்க யோசித்து வருவதாகத் தெரிவித்தார். அட்லாண்டிக் மற்றும் பசிபிக் ஆகிய இரு பெருங்கடல்களைத் தவிர வேறு எந்த நீர்நிலைகளுக்கும் 'டிரம்ப்' அல்லது 'அமெரிக்கா' என்ற பெயரைச் சூட்டப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

முன்னதாக 2025 ஜனவரியில் அதிபராகப் பொறுப்பேற்றவுடன், 'மெக்சிகோ வளைகுடா'வின் பெயரை 'அமெரிக்க வளைகுடா' என டிரம்ப் மாற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து கூகுள் மேப்ஸிலும் அமெரிக்கப் பயனர்களுக்கு அந்த புதிய பெயரே காண்பிக்கப்பட்டது. இதேபோல் சமீபத்தில் ஒரு ஏரிக்கு 'அமெரிக்க ஏரி' என்றும், ஹார்முஸ் ஜலசந்திக்கு 'டிரம்ப் ஜலசந்தி' என்றும் பெயர் மாற்றியதாக அவர் பேசினார். மேலும், ஈரான் உடனான பதற்றமான சூழலில், அந்நாட்டின் அணு செறிவூட்டல் திறனை அமெரிக்கா முழுமையாக அழித்துவிட்டதாகவும், இதனால் விரைவில் உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் என்றும் டிரம்ப் அந்தப் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.