அரசியல்

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சர்கள்.. டென்ஷனில் முதல்வர் விஜய்!

அடுத்த சில மாதங்களில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சர்கள்.. டென்ஷனில் முதல்வர் விஜய்!
TVK Ministers
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுச் சில வாரங்களே ஆன நிலையில், இரண்டு முக்கிய அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைகள் தவெக தலைவரும் முதல்வருமான விஜய்க்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.

அமைச்சர் கில்லி சரத்தின் சர்ச்சை வீடியோ

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கில்லி சரத், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது தனது குடும்பத்தினருடன் அமர்ந்து ஏடிஎம் கார்டு மூலம் வெள்ளை நிறப் பவுடரை நசுக்குவது போன்ற பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். போட்டியின் போது தனது மகளுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பாராசிட்டமால் மாத்திரையை ஏடிஎம் கார்டு கொண்டு பொடியாக நசுக்கிக் கொடுத்ததாகவும், பழைய வீடியோவைத் திரித்துப் பரப்புகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் விஜய் பாலாஜியின் பேச்சு பேச்சு

இந்த சர்ச்சை அடங்குவதற்குள், மற்றொரு அமைச்சரான விஜய் பாலாஜியின் பேச்சு புதிய புயலைக் கிளப்பியுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், "2026 தேர்தலில் மக்களே மிகப்பெரிய ஊழல் செய்தீர்கள். வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிக்கொண்டு, குத்த வேண்டிய இடத்தில் சரியாக குத்தி நமது (தவெக) ஆட்சியை கொண்டு வந்தீர்கள்" என்று பேசினார். இந்த வீடியோ வெளியானதும், வாக்காளர்கள் மற்ற கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தவெகவுக்கு வாக்களித்ததை அமைச்சர் மறைமுகமாக ஒப்புக்கொள்கிறாரா என்ற கேள்வியோடு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

அமைச்சரவையில் மாற்றம்?

அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே அமைச்சர்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்குவது அரசின் நற்பெயரைக் கெடுக்கும் என்பதால், தவெக தலைமை அதிரடி நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறது. தற்போதைக்கு அமைச்சரவையை மாற்றினால் அதை திமுக அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதால், சர்ச்சையில் சிக்கிய இரு அமைச்சர்களும் பொது நிகழ்வுகளில் பங்கேற்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாம். எனினும், நிலைமை சீரானதும் அடுத்த சில மாதங்களில் இவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் எனப் பனையூர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.