அரசியல்

கோவை கல்லூரி மாணவன் கொலை; உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? கனிமொழி எம்பி

கோவை கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையை மூடி மறைக்கப்பார்கிறதா தவெக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை கல்லூரி மாணவன் கொலை; உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? கனிமொழி எம்பி
Kanimozhi MP
கோவையில் தனியார் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தமிழக அரசியலிலும் சட்டப்பேரவையிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், போதைப்பொருள் புழக்கம் குறித்துக் காவல்துறைக்குத் தகவல் அளித்த மாணவனைக் காவல்துறையினரே காட்டிக்கொடுத்ததாகக் குற்றம்சாட்டினார். மேலும், இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், இச்சம்பவம் மாணவர்களிடையே நிலவிய கோஷ்டி மோதலால் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் அவையிலேயே உடனடியாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், அமைச்சரின் பேச்சுக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கோவையில் தனியார் கல்லூரியில் படித்துவந்த முதலாம் ஆண்டு மாணவர், போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததற்காகப் போதை பழக்கத்தில் ஈடுபட்ட மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அதை மாணவர்கள் இடையேயான கோஷ்டி மோதல் என்று திசைதிருப்பும் வகையில் வழக்கை முடித்து வைக்கப்பார்க்கிறது தவெக அரசு.

கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் அளித்த பின் பாதுகாக்கத் தவறியதால் தான், அம்மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறும் நிலையில், பலியான அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு?

இந்தக் கொலையைச் செய்தவர்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.