அரசியல்

மோடிக்கு பதிலாக யார்? பிரதமர் ரேஸில் விஜய்... அகிலேஷ்... பரபரக்கும் 2029 கணக்கு!

2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. மோடிக்கு அடுத்ததாக பாஜக சார்பில் புதிய பிரதமர் முகத்தை முன்னிறுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

மோடிக்கு பதிலாக யார்? பிரதமர் ரேஸில் விஜய்... அகிலேஷ்... பரபரக்கும் 2029 கணக்கு!
2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருந்தாலும், அதற்கான அரசியல் கணக்குகள் இப்போதே தொடங்கிவிட்டன. குறிப்பாக, அடுத்த பிரதமர் யார் என்ற விவாதம் டெல்லி முதல் சென்னை வரை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, India Today - C Voter இணைந்து நடத்தும் “Mood of the Nation” கருத்துக்கணிப்பு, பிரதமர் பதவிக்கான மக்கள் ஆதரவு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனம் பெற்றுள்ளன.

இந்த முறை பிரதமர் பதவிக்கான ஆதரவு பட்டியலில் முதலமைச்சர் விஜய்யின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடிக்கு 48.7 சதவீதமும், ராகுல் காந்திக்கு 27.1 சதவீதமும் ஆதரவு இருப்பதாகவும், விஜய்க்கு 9.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை, பாஜக 261 இடங்களையும், மாநிலக் கட்சிகள் 176 இடங்களையும், காங்கிரஸ் 106 இடங்களையும் பெறும் என கருத்துக்கணிப்பு கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாஜக தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களைப் பெறாது என்பதே இந்தக் கணிப்பின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

‘சிஎம் விஜய் டூ பிஎம் விஜய்?’

இதனால், விஜய் 2029-ல் தேசிய அரசியலுக்குள் நுழைவாரா? பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, “2029 தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் சூழல் உருவாகலாம். தென் மாநிலங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தலாம். அப்படி நடந்தால் கணிசமான இடங்களைப் பெற முடியும்.

விஜய் பிரதமராகும் வாய்ப்பும் இருக்கிறது என்று கட்சி சார்ந்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தொடர்ந்து கூறி வருகிறார். இன்னும் கால அவகாசம் இருக்கிறது; அதற்குள் பல விஷயங்கள் மாறலாம்” என பூடகமாகக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘மீண்டும் மோடி இல்லை?’

மறுபுறம், பாஜக வட்டாரங்களில் அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதமும் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முறை பாஜகவில் பொதுவாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படுவதில்லை என்ற நடைமுறை சுட்டிக்காட்டப்படுகிறது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், மோடியும் 75 வயதைக் கடந்துவிட்டதால், 2029-ல் அவரை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து கட்சிக்குள் கேள்விகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பேசப்பட்டாலும், அடுத்த தலைமுறை தலைமை குறித்த தேடல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதின் கட்காரியின் பெயரும் அவ்வப்போது அடிபட்டாலும், அவரும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இல்லை என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது.

பாஜகவின் அடுத்த ‘சாய்ஸ்’ யார்?

இந்த நிலையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் பெயர் பாஜக - ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் பாஜக வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர் என்றும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளில் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டவர் என்றும் அவருக்கு ஆதரவானவர்கள் கூறுகின்றனர். இதனால், எதிர்காலத்தில் கட்சியின் பிரதமர் முகமாக அவர் முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

மாநிலக் கட்சிகளுக்கு பாஜக ஆதரவு?

இதற்கிடையே, 2029 தேர்தலில் மாநிலக் கட்சிகள் அதிக இடங்களைப் பெறும் பட்சத்தில் என்ன செய்வது என்பது குறித்தும் பாஜக தரப்பில் அரசியல் கணக்குகள் போடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி உருவாகுவதைத் தடுக்கும் வகையில், மாநிலக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்து ஆட்சி அமைக்கச் செய்வது குறித்தும் பாஜக தரப்பில் ஆலோசனைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், பாஜகவுக்கு சாதகமான ஒருவரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் முயற்சியும் நடைபெறலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அகிலேஷ் யாதவுக்கு ‘டார்கெட்’?

இதில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் பெயரும் முக்கியமாக அடிபடுவதாகக் கூறப்படுகிறது. 2029 தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி சேராமல் தனித்து களமிறங்கி, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும் என்றும், அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் பாஜக ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

மேலும், காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதைத் தவிர்த்து, தனி அரசியல் பாதையை உருவாக்குமாறும் அகிலேஷ் யாதவுக்கு பாஜக தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அகிலேஷ் தரப்பு இதுகுறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக தாங்களும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்க்கு பாஜக ஆதரவு கிடைக்குமா?

இத்தனை அரசியல் கணக்குகளுக்கு மத்தியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தேசிய அரசியலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் அவருக்கு பாஜக ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

ஒருபுறம் தவெக தனித்து போட்டியிடும் என்ற பேச்சு... மறுபுறம் பாஜக தனிப்பெரும்பான்மையை இழக்கலாம் என்ற கணிப்பு... இன்னொரு பக்கம் மாநிலக் கட்சிகள் அதிக இடங்களைப் பெறும் வாய்ப்பு என 2029 தேர்தலைச் சுற்றி பல்வேறு அரசியல் கணக்குகள் இப்போதே அரங்கேறி வருகின்றன.

இவற்றில் எந்தக் கணக்கு தேர்தல் நேரத்தில் பலிக்கும்? மோடி மீண்டும் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவாரா? ராகுல் காந்திக்கு எதிராக விஜய் தேசிய அரசியலில் களமிறங்குவாரா? அல்லது மாநிலக் கட்சிகளில் இருந்து ஒருவர் பிரதமராகும் சூழ்நிலை உருவாகுமா? 2029 தேர்தல் நெருங்க நெருங்க, இந்த அரசியல் ‘ஸ்கெட்ச்’கள் இன்னும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பொறுந்திருந்து பார்போம் அரசியல் களம் மாறுமா? என்று.