அரசியல்

TVK vs Congress: எங்க தளபதி தான் பிரதமர்.. இல்ல எங்க தலைவர் தான்.. தொடரும் வார்த்தை போர்!

2029 இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுலா? விஜயா? என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இதுதொடர்பாக தவெக- காங்., இடையே தொடர்ந்து நடக்கும் வார்த்தை போர் கூட்டணி பிளவை உறுதி செய்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

TVK vs Congress: எங்க தளபதி தான் பிரதமர்.. இல்ல எங்க தலைவர் தான்.. தொடரும் வார்த்தை போர்!
TVK vs Congress
வட மாநிலச் சமூக வலைதளங்களில் "அடுத்த பிரதமர் யார்?" என்ற கேள்விகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பலரும் சுட்டிக்காட்டும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனிடையே, தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் விருப்பமான பிரதமர் வேட்பாளர்கள் பட்டியலில் 9 சதவீத ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் 3-வது இடத்தைப்பிடித்தார். இந்த முடிவுகள் வெளியானதில் இருந்தே தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி தான் விஜய்யைப் பிரதமராக்குவார்!

இந்தச் சூழலில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு வருகை தந்த கவுண்டம்பாளையம் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்கள் தளபதியைச் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்ததே ராகுல் காந்தி சார் தான். அவரே தான் தளபதியின் கரங்களைப் பிடித்து 2029-ல் பிரதமர் நாற்காலியிலும் உட்கார வைக்கப்போகிறார். நிச்சயமாகச் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் அடுத்த பிரதமர் ஆவார்," என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இன்னும் ரசிகர் மனப்பான்மை தான்!

தவெக எம்.எல்.ஏ-வின் இந்த பேச்சிற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவர் ராகுல் காந்தி தான். இப்போது வந்திருக்கும் தவெக எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் புதியவர்கள். அவர்கள் இன்னும் ரசிகர் மனப்பான்மையிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமது முதலமைச்சர் விஜய்யே ராகுல் காந்தி தான் பிரதமர் என்று ஒப்புக்கொண்டுவிட்டார்," என்று தெரிவித்தார்.

தொடரும் வார்த்தைப் போர்

கனிமொழி சந்தோஷின் கருத்தும், அதற்குத் தாரகை கத்பர்ட் கொடுத்த பதிலும் தவெக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்றுக்கொள்ளாவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் எச்சரித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு வெளிப்பட்டுள்ளது.