அரசியல்

"சுண்டெலிப் போல் மவுனம் காக்கும் ஊடகம்" - ராகுல் காந்தி சாடல்

மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், "ஊடகங்கள் சுண்டெலியைப் போல அமைதியாக இருக்கக்கூடாது," என காங்கிரஸை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.


Rahul Gandhi slams Media as Mice
மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், "ஊடகங்கள் சுண்டெலியைப் போல அமைதியாக இருக்கக்கூடாது," என காங்கிரஸை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தின் மகர் துவார் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னிடம் நிருபர்கள் தொடர்ந்து குறுக்கிட்டு கேள்வி எழுப்புவதாகவும், அதேபோல் ஆளுங்கட்சி தலைவர்களிடம் கேள்வி எழுப்புவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து கோபமடைந்த ராகுல் காந்தி, “என்னிடம் குறுக்கிட்டு கேள்வி கேட்பது போல் ஆளுங்கட்சியினரிடம் உங்களால் கேட்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது ஊடகங்கள் ஏன் அதே விதத்தில் கேள்விகளை எழுப்புவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“அமித் ஷாவிடம் அப்படி என்ன சிறப்பு? ஊடகங்கள் ஏன் அமைதியாக இருக்கின்றன? என்னிடம் மட்டும் ஏன் தொடர்ந்து குறுக்கிடுகிறீர்கள்?” அனைத்து ஊடகங்களும் ஏன் சுண்டெலியை போல மவுனம் காக்கின்றன?" என ராகுல் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தையும் ராகுல் காந்தி அப்போது முன்வைத்தார். டில்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது யார், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாணவர்கள் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் விரும்பினால் இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதே விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தியும் ஊடகங்களின் அணுகுமுறையை விமர்சித்துள்ளார்.

“மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசிடம் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, நாடாளுமன்றம் முடக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சிகளிடம் மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதனால் மாணவர்கள் விவகாரம், நாடாளுமன்ற முடக்கம் மற்றும் ஊடகங்களின் செயல்பாடு ஆகிய மூன்று விவகாரங்களையும் முன்வைத்து காங்கிரஸ் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.