அரசியல்

"திமுக - பாஜக தற்போது நேரடி கூட்டணி" - உண்மையை உடைத்தாரா நிர்மல் குமார்?

திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணியில் இருப்பதாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே நேரடிக் கூட்டணி இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


CTR Nirmal Kumar said DMK & BJP now Direct Alliance
திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணியில் இருப்பதாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே நேரடிக் கூட்டணி இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், திமுக - பாஜக இடையேயான அரசியல் தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் சமீபத்திய கருத்துகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய அவர், திமுக தற்போது பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், "பாஜகவுடன் திமுக தற்போது நேரடிக் கூட்டணி வைத்துள்ளது. அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என கனிமொழி சோமுவும், வானதி சீனிவாசனும் கூறியதை தொடர்பு படுத்தியும், திருச்சி சிவா மத்திய அமைச்சராக இருப்பார் என கூறப்பட்டதை திமுக தரப்பில் இருந்து யாரும் மறுக்கவில்லை என்றும், இவைகளை வைத்து பார்க்கும் போது திமுக, பாஜகவுடன் நேரடிக் கூட்டணி வைத்திருப்பது நிரூபணமாகியுள்ளது" என்றார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றது குறித்தும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். “இருக்கை மாற்றத்துக்காக தேநீர் விருந்தில் பங்கேற்றேன் என கனிமொழி கூறுவது நம்பும்படியாக இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்தும் அவர் விமர்சனம் முன்வைத்தார். தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிப்போம் என்று திமுக இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அக்கட்சி மௌனம் காப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

டெல்லியில் யாரை சந்தித்து பேசினாலும் அது மக்கள் நலனுக்காகவே இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதையும் அமைச்சர் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.

இதனிடையே, காவிரி நதி நீர் உரிமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை பாதுகாப்பதற்கும், இங்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கும் அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் போதைப்பொருட்களுக்கு எதிராக அரசு சார்பில் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அதேபோல், தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.

முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஊடகங்கள் அழைக்கப்படாதது தொடர்பாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். மாநாட்டு அரங்கில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையே ஊடகங்களை அழைக்க முடியாததற்கான காரணம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

திமுக - பாஜக இடையே நேரடி கூட்டணி இருப்பதாக அமைச்சர் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, ஏற்கனவே தமிழக அரசியலில் பேசுபொருளாக உள்ள கூட்டணி கணக்குகளை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.