சினிமா

சாதி, மதமற்றவர் என்பது நடத்தையில் தெரிய வேண்டும்: நடிகர் பார்த்திபன் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து!

ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை என, நடிகர் பார்த்திபன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சாதி, மதமற்றவர் என்பது நடத்தையில் தெரிய வேண்டும்: நடிகர் பார்த்திபன் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து!
Actor Parthiban
சாதி, மதமற்றவர் என சான்று வழங்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சான்று வழங்க சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, ஜாதி - மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பித்ததாகக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி மதம் மற்ற சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில், நடிகர் பார்த்திபனுக்கு, ஜாதி, மதம் சாராதவர் என சோழிங்கநல்லூர் தாசில்தாரர், ஏப்ரல் 27 ம் தேதி சான்று வழங்கியுள்ளார்.

பார்த்திபன் தாக்கல் செய்த இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராகி இருந்த நடிகர் பார்த்திபன், அர்த்தமுள்ள ஒரு சமுதாயம் உருவாக வழி செய்துள்ளதற்கு நன்றி என, நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதி, ஜாதி- மதம் அற்றவர் என்பதை தெரிவிக்க சான்று பெறவேண்டிய அவசியம் இல்லை; இதுபோன்று சான்று வழங்க தாசில்தாருக்கும் அதிகாரம் இல்லை; ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே உங்களுக்கு இந்த சான்று வழங்கும் படி உத்தரவிட்டதாக குறிப்பிட்டார்.

மேலும், இந்த சான்று விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும்; உண்மையில் ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை; ஜாதி மத மற்றவர் என சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை; நம் நடத்தை மூலம் தான் அதை காட்ட வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

அதற்கு நடிகர் பார்த்திபன், நல்லவர் என்று கூறுவதற்கு கூட சான்றிதழ் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து, நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி மத மற்றவர் என சான்றிதழ் வழங்கப்பட்டதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அவரது வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.