சினிமா

'ஜனநாயகன்' ரிலீஸ்: களைகட்டும் திரையரங்குகள்.. ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.

'ஜனநாயகன்' ரிலீஸ்: களைகட்டும் திரையரங்குகள்.. ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
JanaNayagan
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கைப் பிரச்சினைகளைக் கடந்து இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய்யின் இறுதிப் படம் என்பதால், உலகளவில் 3,500-க்கும் மேற்பட்ட திரைகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலை 9 மணி அளவிலும், பிற மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் காலை 8 மணிக்கும் காட்சிகள் தொடங்கின. திரையரங்குகளின் முன்பு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

திரையரங்குகளுக்கு வெளியே திரண்ட ரசிகர்கள் விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடியும், அவரது கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரையுலகை விட்டு விலகும் முன் விஜய் நடித்துள்ள இறுதித் திரைப்படம் என்பதால், இத்திரைப்படத்திற்குத் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கு 'ஜனநாயகன்' படத்தின் டிக்கெட்டுகள் பல முன்னணி திரையரங்குகளில் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.