சினிமா

"என்னை மன்னிச்சிடுங்க!"... அமிதாப் பச்சனின் திடீர் அறிவிப்பு... ஷாக்கில் ரசிகர்கள்!

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிறிது காலம் சமூக வலைத்தள பதிவுகளிலிருந்து விலகுவதாக பதிவிட்டுள்ள நிலையில், இப்பதிவு அவரின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


amitabh bachchan

பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். தனது ரசிகர்களுடன் தினசரி வலைப்பதிவுகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தனது எண்ணங்களை அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மருத்துவர்கள் ஓய்வெடுத்து உடல்நிலையை மீட்டெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், வழக்கமான சமூக வலைதளப் பதிவுகளில் இருந்து சில நாட்கள் விலகியிருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில், “மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில நாட்கள் ஓய்வெடுத்து உடல்நிலையை மீட்டெடுக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது என்னால் எதையும் எழுத முடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு தசரா பண்டிகையன்றும் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் இதேபோன்ற தகவலை அமிதாப் பச்சன் பகிர்ந்திருந்தார். அனைவருக்கும் தசரா வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், தற்போது கடுமையான ஓய்வு மற்றும் உடல்நல மீட்பு காலத்தில் இருப்பதால் தொடர்பு கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

செட்டில் ஏற்பட்ட விபத்து

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி Kaun Banega Crorepati 18 நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது அமிதாப் பச்சனுக்கு சிறிய விபத்து ஏற்பட்டது. படப்பிடிப்புத் தளத்தில் தவறி விழுந்ததில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக பின்னர் அவர் சமூக வலைதளம் மூலம் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருப்பதாக அவர் கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

அமிதாப் பச்சன் வீட்டையும் நோட்டமிட்ட தாக்குதல் கும்பல்?

இதற்கிடையே, நடிகர் டைகர் ஷ்ராஃப் மும்பையின் புஷ்பா பார்க் பகுதியில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையின்படி, டைகர் ஷ்ராஃப் தாக்கப்பட்ட நாளில், அமிதாப் பச்சன், சல்மான் கான், அக்ஷய் குமார், ஆமிர் கான் உள்ளிட்ட சில பாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகளையும் தாக்குதல் கும்பல் நோட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த நடிகர்களின் வீடுகளில் பலத்த பாதுகாப்பு இருப்பதை அறிந்த பின்னர், டைகர் ஷ்ராஃப் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லும் கால்பந்து மைதானத்தின் அருகே அவரைக் கண்ட தாக்குதல் கும்பல், அவரை இலக்காகத் தேர்வு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமிதாப் பச்சனின் அடுத்தடுத்த படங்கள்

அமிதாப் பச்சன் கடைசியாக ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த தமிழ் ஆக்ஷன் திரைப்படமான வேட்டையன் மற்றும் பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்த கல்கி 2898 AD ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது கல்கி 2898 AD Part 2 படத்தில் மீண்டும் தனது கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும், ரிபு தாஸ்குப்தா இயக்கத்தில் உருவாகியுள்ள நீதிமன்ற பின்னணியிலான த்ரில்லர் திரைப்படமான Section 84 படத்திலும் நடித்துள்ளார்.

இதில் டயானா பென்டி, நிம்ரத் கவுர், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. இந்நிலையில் அமிதாப் பச்சனின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.