சினிமா

‘அந்த விஷயத்தில் நான் கம்ஃபர்ட்டபிள் இல்லை!’... ராஷ்மிகா மந்தனா போட்ட கண்டிஷன்!

ஜான்வி கபூர் ‘Peddi’ சர்ச்சைக்கு மத்தியில், படங்களில் தனது தனிப்பட்ட எல்லைகள் மற்றும் அசௌகரியங்கள் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

‘அந்த விஷயத்தில் நான் கம்ஃபர்ட்டபிள் இல்லை!’... ராஷ்மிகா மந்தனா போட்ட கண்டிஷன்!

சினிமாவில் ஒரு நடிகையின் கதாபாத்திரம் எப்படி காட்சிப்படுத்தப்படுகிறது என்பது குறித்த விவாதம் அவ்வப்போது எழுவது உண்டு. குறிப்பாக, கமர்ஷியல் படங்களில் நடிகைகளின் உடைகள், காட்சிகள் மற்றும் கேமரா கோணங்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுகின்றன.

இந்நிலையில், தனக்கான எல்லைகள் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாகப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

ராஷ்மிகா மந்தனா தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ‘Koffee With Karan’ சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அக்டோபர் 21-ம் தேதி ஒளிபரப்பான இந்த எபிசோடில், நடிகைகளின் திரைத் தோற்றம் தொடர்பான விவாதம் எழுந்தது.

அப்போது, ராம் சரண் நடிப்பில் வெளியான ‘Peddi’ படத்தில் ஜான்வி கபூரின் கதாபாத்திரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொகுப்பாளர் கரண் ஜோஹர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட சில காட்சிகளில் ஜான்வி கபூர் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டார் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்ததை சுட்டிக்காட்டிய கரண், ராஷ்மிகா தனது கதாபாத்திரங்கள் தொடர்பாக இதுபோன்ற விஷயங்களில் முன்கூட்டியே எல்லைகளை வகுப்பாரா என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ஒரு கதாபாத்திரத்துக்கு குறிப்பிட்ட உடை தேவைப்பட்டாலும், அதில் தனக்கு இருக்கும் வசதியையும் கருத்தில் கொள்வதாகக் கூறினார்.

“சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இருக்காது. சில கதாபாத்திரங்களுக்கு பிகினி போன்ற உடைகள் தேவைப்படலாம். ஆனால், அதிகமாக உடலை வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகளில் நான் அவ்வளவு கம்ஃபர்ட்டபிளாக உணர்வதில்லை. நான் அப்படிப்பட்ட நபர் இல்லை” என்று ராஷ்மிகா கூறினார்.

மேலும், “எனக்கான சில எல்லைகள் இருக்கின்றன. பெரும்பாலான இயக்குநர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட இயக்குநர்களுடன்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

‘நோ’ சொல்ல நடிகர்களுக்கும் ஆதரவு தேவை!

ராஷ்மிகாவின் கருத்தைத் தொடர்ந்து பேசிய விஜய் தேவரகொண்டா, படப்பிடிப்பு தளத்தில் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேசுவது நடிகர்களுக்கு எப்போதும் எளிதானதாக இருப்பதில்லை என்றார்.

ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, குறிப்பிட்ட காட்சியை மறுப்பது குறித்து நடிகர்கள் தயக்கம் காட்டக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, “நீங்கள் படத்தில் கையெழுத்திட்டுவிட்டீர்கள்... இதுதானே உங்கள் வேலை?” என்று கேள்வி எழுப்பப்படலாம் என்பதால், நடிகர்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் போகும் சூழலும் இருப்பதாக விஜய் கூறினார்.

“ஒரு விஷயத்துக்கு ‘நோ’ சொல்லலாம் என்பதை நடிகர்களுக்குப் புரிய வைக்கும் ஆதரவு அமைப்பு தேவை” என்பதே விஜய்யின் கருத்தாக இருந்தது.

இதற்கு ராஷ்மிகாவும், இயக்குநர்களிடம் தங்களது சந்தேகங்கள் மற்றும் அசௌகரியங்களைத் தயக்கமின்றி கேட்கும் வகையில் படப்பிடிப்பு சூழல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தனக்கே சில நேரங்களில் ஒரு காட்சியைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டால், விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்பதாகவும், அவர் தன்னை வெளிப்படையாகக் கேள்வி கேட்க ஊக்குவிப்பதாகவும் ராஷ்மிகா தெரிவித்தார்.

ஜான்வி கபூர் சர்ச்சைக்கு மத்தியில் ராஷ்மிகாவின் பேச்சு!

‘Peddi’ படத்தில் ஜான்வி கபூர் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளார் என்பது தொடர்பாக இணையத்தில் எழுந்த விவாதங்களின் பின்னணியில், ராஷ்மிகாவின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறிப்பிட்ட காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட கேமரா கோணங்கள் உள்ளிட்டவை குறித்து சிலர் கேள்வி எழுப்பிய நிலையில், கமர்ஷியல் சினிமாவில் நடிகைகளின் திரை பிரதிநிதித்துவம் தொடர்பான விவாதமும் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இதற்கிடையே, ஜான்வி கபூருக்கும் சில ரசிகர் பக்கங்களுக்கும் இடையிலானதாகக் கூறப்படும் தனிப்பட்ட உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களும் சமூக வலைத்தளங்களில் பரவின. அந்தச் செய்திகளில், தனது கதாபாத்திரம் மற்றும் கேமரா கோணங்கள் தொடர்பாக ஜான்வி அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

எனினும், அந்த ஸ்கிரீன்ஷாட்களின் உண்மைத்தன்மை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யப்படாத நிலையில், அவற்றை அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது.

இந்தச் சூழலில், “எனக்கான எல்லைகள் இருக்கின்றன” என்ற ராஷ்மிகாவின் பேச்சு, சினிமாவில் நடிகர்களின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் பணிச்சூழல் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.