உலகம்

"நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா?" நேபாள் வெள்ளத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்!

நேபாள வெள்ளத்தில் 626 பேர் பலியான சோகத்திற்கிடையே, மிதந்து வந்த வங்கியின் பணப்பெட்டி மற்றும் சடலத்திலிருந்து நகைகளைத் திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Nepal Flood
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாயமானவர்களின் எண்ணிக்கை 2,426 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தகைய சோகத்திற்கு நடுவே, வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கியின் பணப்பெட்டியை உடைத்து பணத்தைத் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிதந்து வந்த ATM மெஷின்

ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டிகோஷி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் வங்கியின் பணப்பெட்டி ஒன்று அடித்துச் செல்லப்பட்டு, தாடிங்க் பகுதியில் உள்ள திரிசூலி ஆற்றின் கரையில் ஒதுங்கியது. இதனையறிந்த உள்ளூர்வாசிகள் சிலர் அந்த பணப்பெட்டியை உடைத்து உள்ளிருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு 19 முதல் 49 வயதுடைய 29 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 92.68 லட்சம் நேபாள ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.57 லட்சம்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணப்பெட்டி எந்த வங்கிக்குச் சொந்தமானது என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலத்திலிருந்து நகைப் பறிப்பு

மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக, நாராயணி ஆற்றில் மிதந்து வந்த பெண் ஒருவரின் சடலத்திலிருந்து தங்கத் நகைகளை இருவர் கழற்றிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தற்போது வரை 517 வெளிநாட்டவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை என்பதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், நேபாளத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.