அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானில் இருந்து பலமுறை பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய உதவியதற்காகப் 'போர்ட்டீஸ் பார்ட்னர்ஸ் எல்.எல்.பி' (Portease Partners LLP) மற்றும் அதன் பங்காளிகளான இந்திரிஸ்மியா அஷ்ரஃப்மியா ஷேக், ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி ஆகியோர் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'சதாசிவா ஓவர்சீஸ் லிமிடெட்' நிறுவனம் பிப்ரவரி 2024 முதல் ஜூன் 2025 வரை சுமார் 69 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, 'பி.பி சாஃப்ட்டெக் பிரைவேட் லிமிடெட்' மற்றும் அதன் இயக்குநர் பிரசாந்த் கார்க், மற்றும் 'பிரக்ருதீஸ் இன்ஃப்ரா இம்பேக்ஸ் பிரைவேட் லிமிடெட்' ஆகிய நிறுவனங்கள் தலா 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ததால் இத்தடைகளுக்கு உள்ளாகியுள்ளன.
ஈரானிடமிருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்குவது, விற்பனை செய்வது மற்றும் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரானை சர்வதேச அளவிலான நிதிப் பரிவர்த்தனைகளில் இருந்து தனிமைப்படுத்தி, அதன் பொருளாதார ஆதாரங்களை முடக்குவதே அமெரிக்காவின் பிரதான திட்டமாகும்.
அமெரிக்காவின் இந்தத் தொடர் பொருளாதார நெருக்கடிகளால் ஈரானின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் நிலவும் தட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி, பலமான நிலையில் இருக்கும்போதே போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7









