உலகம்

ரஷ்யா - உக்ரைன் மோதல்: இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ஏவுகணைத் தாக்குதல்!

உக்ரைனில் உள்ள இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் மோதல்: இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ஏவுகணைத் தாக்குதல்!
Russia Hits Indian Billionaires Factory In Ukraine
உக்ரைனில் உள்ள மிகப்பெரிய எஃகு தயாரிப்பு ஆலையான 'ஆர்சிலர் மிட்டல் கிரிவி ரிஹ்' (ArcelorMittal Kryvyi Rih) வளாகத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்தியக் கோடீஸ்வரரான லக்ஷ்மி மிட்டலுக்குச் சொந்தமான உலகளாவிய எஃகு நிறுவனத்தின் உக்ரைன் கிளையான இந்த ஆலை மீது நேற்று நடத்தப்பட்ட இத்தாக்குதலால், ஆலையின் செயல்பாடுகள் பகுதியளவு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய உக்ரைன் பகுதியான கிரிவி ரிஹ் நகரில் அமைந்திருந்த இந்த ஆலை மீதான தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், சுமி நகரில் ஒருவரும், சபோரிழியா பகுதியில் குடியிருப்பு மீது விழுந்த தாக்குதலில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

தலைநகர் கியீவிலும் ரஷ்யா நடத்திய தாக்குதலால் பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதுடன் 6 பேர் காயமடைந்தனர். குறிப்பாக, பொச்சைனா மெட்ரோ நிலையம் அருகிலுள்ள மிகப்பெரிய புத்தகச் சந்தையில் பெரிய அளவில் தீப்பற்றி எரிந்து பல கடைகள் நாசமாகின. பொதுமக்கள் வாழும் மற்றும் வணிக உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணைகளை வீசி வருவதாகச் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

கிரிவி ரிஹ் நகரில் உள்ள எஃகு ஆலை மற்றும் உக்ரைனின் 'ஃபிளமிங்கோ' ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தலைநகர் கியீவில் உள்ள ராணுவ-தொழில்துறை மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் தரப்பிலிருந்தும் ரஷ்யா மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ரஷ்யாவில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒரே இரவில் 822 உக்ரைனிய ட்ரோன்களை அழித்ததாகத் தெரிவித்துள்ளது. இதில் மாஸ்கோ நகரை நோக்கி வந்த சுமார் 600 ட்ரோன்களும் அடங்கும். மாஸ்கோ பகுதியில் ட்ரோன் விழுந்ததில் 83 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.