உலகம்

அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு டிரம்ப் செக்! விசாவை வைத்து வேட்டு!

அமெரிக்கா செல்ல விசா கனவில் இருந்தவர்களுக்கு திடீர் அதிர்ச்சி... உலகம் முழுவதும் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன! புதிய தேதி எப்போது? காரணம் என்ன? டிரம்ப் அரசின் அடுத்தடுத்த குடியேற்ற நடவடிக்கைகளால் இந்தியர்களுக்கும் சிக்கலா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு டிரம்ப் செக்! விசாவை வைத்து வேட்டு!
Trump Administration Halts US Visa Interviews
அமெரிக்கா செல்ல விசா கனவில் இருந்தவர்களுக்கு திடீர் அதிர்ச்சி... உலகம் முழுவதும் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன! புதிய தேதி எப்போது? காரணம் என்ன? டிரம்ப் அரசின் அடுத்தடுத்த குடியேற்ற நடவடிக்கைகளால் இந்தியர்களுக்கும் சிக்கலா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

அமெரிக்காவுக்குச் செல்ல விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

திடீர் விசா நேர்காணல் மாற்றம்:

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் நடைபெற இருந்த பல விசா நேர்காணல்கள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் ஒதுக்கப்பட்ட சில விண்ணப்பதாரர்களுக்கும், அவர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. புதிய நேர்காணல் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பயிற்சிக்காகவே நேர்காணல்கள் மாற்றமா?

விசா நேர்காணல்கள் மாற்றியமைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் பணியாற்றும் தூதரக அதிகாரிகளுக்கு விசா விண்ணப்பங்களை ஒரே மாதிரியான நடைமுறையில் பரிசீலிப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை முறையாகவும் ஒரே சீரான முறையிலும் மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் இந்தப் பயிற்சியில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பயிற்சி எத்தனை நாட்கள் நடைபெறும், விசா நேர்காணல்கள் எப்போது வழக்கமான முறைக்கு திரும்பும் என்பது குறித்து இதுவரை தெளிவான காலக்கெடு அறிவிக்கப்படவில்லை.

யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

அமெரிக்காவுக்கு சுற்றுலா, கல்வி, வேலை, குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக ஏற்கனவே நேர்காணல் தேதியை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு புதிய தேதி எப்போது கிடைக்கும் என்பது தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. நேர்காணல் தாமதமானால் பயணம், வேலைவாய்ப்பு, கல்வி சேர்க்கை உள்ளிட்ட திட்டங்களிலும் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகலாம்.

டிரம்ப் அரசின் குடியேற்றக் கட்டுப்பாடுகள்:

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதலே குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

முதலில் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்திய அமெரிக்க அரசு, தற்போது சட்டப்பூர்வ குடியேற்றம் மற்றும் பல்வேறு வகையான விசா நடைமுறைகளிலும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது.

விசா மற்றும் கிரீன் கார்டு தொடர்பான நடவடிக்கைகள், விண்ணப்பங்களை கடுமையாக ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதள பதிவுகளும் கண்காணிப்பா?

அமெரிக்கா செல்ல விரும்புபவர்களின் சமூக வலைதள செயல்பாடுகளும் அதிகாரிகளின் கவனத்தில் கண்காணிக்கப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்க அரசுக்கு எதிரான கருத்துகள், சர்வதேச அரசியல் விவகாரங்கள் தொடர்பான பதிவுகள் உள்ளிட்டவை விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது கவனித்து தெரிவு செய்து வருகின்றனர். இதனால் வெளிநாட்டினர் மத்தியில் கூடுதல் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு H-1B விசா சிக்கலா?

அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மிகவும் முக்கியமான H-1B விசா திட்டத்திலும் மாற்றங்களை கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் H-1B விசாவை நம்பியுள்ள நிலையில், இந்தத் திட்டத்தில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டால் அது இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

குடியேற்ற விசாக்களிலும் அதிரடி?

சுற்றுலா அல்லது வர்த்தக நோக்கங்களுக்காக அமெரிக்கா சென்ற பின்னர் அங்கேயே தங்குவதற்காக புகலிடம் கோரிய வெளிநாட்டினரின் விசா நிலை குறித்தும் அமெரிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் டிரம்ப் அரசின் நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இல்லாமல், பல்வேறு வகையான விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகளையும் உள்ளடக்கியதாக மாறி வருகிறது.

நீதிமன்றங்களில் எதிர்ப்பு:

அதேவேளையில், டிரம்ப் அரசின் அனைத்து குடியேற்ற நடவடிக்கைகளும் தடையின்றி அமல்படுத்தப்படவில்லை. சில கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

சமீபத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா வழங்குவதை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதிபருக்கு அத்தகைய நடவடிக்கையை எடுக்க போதுமான அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பாகவும் சட்டரீதியான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மனித உரிமை அமைப்புகள் கண்டனம்:

டிரம்ப் அரசின் குடியேற்றக் கொள்கைகளுக்கு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

குடியேற்றக் கட்டுப்பாடுகள் பாரபட்சமான முறையில் செயல்படுத்தப்படுவதாகவும், சில நடவடிக்கைகள் கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்ட நடைமுறைகள் தொடர்பான கேள்விகளை எழுப்புவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே உலகம் முழுவதும் அமெரிக்க விசா நேர்காணல்கள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டிருப்பது, ஏற்கனவே விசா விண்ணப்பித்தவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. புதிய நேர்காணல் தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.