உலகம்

"யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை" - டிரம்ப் பேச்சுக்கு மெலோனி பதிலடி!

அமெரிக்க அதிபர் பேச்சுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்.


Giorgia meloni
பிரான்சின் ஈவியான் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ‘ஜி-7’ உச்சி மாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடையே புதிய வார்த்தைப்போர் வெடித்துள்ளது.

இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றுக்குத் தொலைபேசி வழியாகப் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜி-7 மாநாட்டின் போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுக்கக் கெஞ்சியதாகவும், அவர் மீது பரிதாபப்பட்டே தான் அதற்குச் சம்மதித்ததாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிபர் டிரம்பின் கருத்துக்கு இத்தாலி பிரதமர் மெலோனி தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

டிரம்பின் கூற்று முற்றிலும் பொய்: மெலோனி

அதிபர் டிரம்பின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இத்தாலி பிரதமர் மெலோனி வெளியிட்டுள்ள வீடியோவில், அமெரிக்க அதிபர் கூறுவது முழுக்க முழுக்கப் பொய் என்று சாடியுள்ளார். மேலும், அவர் ஏன் தனது நட்பு நாடுகளிடம் இப்படி நடந்து கொள்கிறார் என்று தனக்குத் தெரியவில்லை என்றும், எதிரி நாடுகளிடம் காட்ட வேண்டிய உறுதியைத் டிரம்ப் நட்பு நாடுகளிடம் காட்டுவது வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். "நானோ அல்லது இத்தாலியோ யாரிடமும் எப்போதும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை" என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்த அமைச்சர்

அதிபர் டிரம்பின் இந்தப் பேச்சு இத்தாலி நாட்டைப் பெருமளவில் புண்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு கருதுகிறது. இதன் காரணமாக, இத்தாலி வெளியுறவு அமைச்சர் ஆண்டானியோ தஜானி, நாளை மற்றும் நாளை மறுநாள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளவிருந்த தனது அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார். இந்தச் சம்பவத்தால் அமெரிக்கா - இத்தாலி இடையிலான ராஜதந்திர உறவில் தற்காலிகப் விரிசல் ஏற்பட்டுள்ளது.