உலகம்

ரூ.3,000 கோடி லஞ்சப் புகார்: முன்னாள் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை!

சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் ரூ.3000 கோடி லஞ்சம் பெற்ற புகாரில், அந்நாட்டின் முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ரூ.3,000 கோடி லஞ்சப் புகார்: முன்னாள் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை!
Death penalty for a person who accepted bribes in china
சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் ரூ.3000 கோடி லஞ்சம் பெற்ற புகாரில், அந்நாட்டின் முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

சீனாவின் நாஞ்சிங் நகரில் கடந்த 1993 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் யாங் யூலின் (69). இவர் தனது பதவிக் காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கட்டுமான ஒப்பந்தங்கள், நிலப் பரிமாற்றங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெற்றுத் தருவதற்காகப் பெருமளவில் லஞ்சம், சொத்துக்களைப் பெற்றுள்ளார்.

இது தவிர, அரசுப் பணத்தைக் கையாடல் செய்தது, முறைகேடாகப் பணப் பரிமாற்றம் செய்தது உள்ளிட்ட குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்கின் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில் யாங் யூலின் சிக்கினார்.

இவ்வழக்கை விசாரித்த சாங்சூ நகர நீதிமன்றம், "யாங் யூலின் செய்த குற்றங்கள் மிகக் கடுமையானவை; நாட்டின் நலனுக்கும் மக்களுக்கும் அவர் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளார்" எனக் கூறி அவருக்கு மரண தண்டனை விதித்தது. விசாரணையின் போது யாங் யூலின் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்த போதிலும், அவரது குற்றத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் அவருக்குக் குறைந்தபட்சத் தண்டனையோ அல்லது மன்னிப்போ வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சீனாவில் பொருளாதாரக் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்படுவது மிகவும் அரிதான ஒன்றாகும். இருப்பினும், ஊழல் தொகையின் மதிப்பு 1 பில்லியன் யுவானைத் (சுமார் ரூ.1,150 கோடி) தாண்டும் பட்சத்தில், அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதற்கு முன்னதாக, கடந்த 2021-இல் ரூ.2,000 கோடி ஊழல் வழக்கில் நிதி அதிகாரி லாய் சியாமினுக்கும், 2024-இல் ரூ.3,400 கோடி ஊழல் வழக்கில் மங்கோலிய அதிகாரி லி ஜியான்பிங்கிற்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.