உலகம்

ஐரோப்பாவில் உயிர்களை பறிக்கும் வெப்ப அலை.... புவி வெப்பமயமாதல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவில் உயிர்களை பறிக்கும் வெப்ப அலை.... புவி வெப்பமயமாதல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை !
தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், இது புவி வெப்பமயமாதலின் தீவிர விளைவு என காலநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம், எதிர்காலத்தில் மேலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், பிரான்ஸ் தேசிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கடும் வெப்பத்தின் தாக்கத்தால் எதிர்பார்க்கப்பட்டதை விட சுமார் 1,000 உயிரிழப்புகள் கூடுதலாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்ப அலை காரணமாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் தேவையற்ற வெளிப்பயணங்களைத் தவிர்த்து, போதிய அளவு தண்ணீர் அருந்தி பாதுகாப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

புவி வெப்பமயமாதலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், உலக நாடுகள் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.