உலகம்

அபுதாபி ட்ரிப் பிளான் பண்றீங்களா? இந்த செய்தி உங்களுக்குதான்!

அபுதாபிக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் புதிய சிறப்புத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி ட்ரிப் பிளான் பண்றீங்களா? இந்த செய்தி உங்களுக்குதான்!
Abu Dhabi
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் புதிய சிறப்புத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதிவாய்ந்த இந்தியப் பயணிகள் விசா கட்டணமின்றி அபுதாபி சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 20,000 விசாக்கள் வரை கட்டணமின்றி வழங்கப்படவுள்ளன. இருப்பினும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் இது தானாகக் கிடைக்காது.

அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா நிறுவனங்கள் மூலம் அபுதாபி சுற்றுலா பேக்கேஜை முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், அபுதாபியில் உள்ள விடுதிகளில் குறைந்தது தொடர்ந்து 3 இரவுகள் தங்க வேண்டும் என்பதோடு, இந்தியாவில் இருந்து நேரடியாகப் புறப்பட்டு மீண்டும் இந்தியா திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும்.

பயணிகள் நேரடியாக விசா விண்ணப்பம் செய்து இச்சலுகையைப் பெற முடியாது. சுற்றுலா நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் விசா கட்டணத்தை அபுதாபி சுற்றுலாத் துறையே ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் இந்தச் சிறப்புச் சலுகை, இந்தியப் பயணிகள் அபுதாபியில் அதிக நாட்கள் தங்கி அங்குள்ள பண்பாடு மற்றும் பொழுதுபோக்கு இடங்களைப் பார்வையிடுவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது.