உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு: சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு: சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Iranian drone attack on a Singaporean ship
அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே, ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்தான சில தினங்களில் தாக்குதல்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. வளைகுடா பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்குவது மற்றும் 60 நாட்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கட்டணமில்லா பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும். இதன் பலனாக, நேற்று வரை இந்தியக் கப்பல்கள் உட்பட 70-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் சரக்குக் கப்பல்கள் இப்பாதையைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றன.

சர்வதேச கடல்சார் அமைப்பின் அதிரடி முடிவு

இந்நிலையில், ஓமனின் தஹித் கடற்கரை அருகே சிங்கப்பூர் நாட்டுப் கொடியுடன் உடன் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது ஈரான் திடீரென ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலின் கட்டுப்பாட்டு அறை (Control Room) பலத்த சேதமடைந்துள்ளதாகப் பிரிட்டனின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இத்தாக்குதலில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெர்சிய வளைகுடாவில் சிக்கியுள்ள பல சர்வதேசக் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ஐநாவின் சர்வதேச கடல்சார் அமைப்பு சில நாட்களுக்கு முன்பு கொண்டு வந்த சிறப்புத் திட்டத்தை தற்போது தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் இப்பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.