உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. எங்கள் நிபந்தனை இதுதான்.. அமெரிக்காவிடம் ஸ்ட்ரிக்டாக சொன்ன ஈரான்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனையாகும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. எங்கள் நிபந்தனை இதுதான்.. அமெரிக்காவிடம் ஸ்ட்ரிக்டாக சொன்ன ஈரான்!
ayatollah mojtaba khamenei
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனையாகும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச்செயலாளர் ஷேக் நைம் காசிம் மற்றும் அதன் போராளிகள் அனுப்பிய கடிதத்திற்குப் பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மொஜ்தபா காமேனி, அவ்வமைப்பின் தியாகத்தையும் மன உறுதியையும் பாராட்டியுள்ளார். ஹிஸ்புல்லாவை "அசையாத பாறை" என்றும், ஒரு சிறிய நாற்றாகத் தொடங்கி தற்போது பிரம்மாண்ட மரமாக வளர்ந்து இஸ்லாமிய உலகிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், தொடர்ந்து போராடினால் இறுதி வெற்றி சாத்தியமாகும் என்றும் தெரிவித்த அவர், கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட தளபதிகளுக்குத் தனது அஞ்சலியைச் செலுத்தினார்.

லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் பாதுகாப்பது ஈரானின் கடமை எனத் தெரிவித்த காமேனி, இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே அமெரிக்காவுடனான மோதல் முடிவுக்கு வரும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

இதனிடையே, அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்ட லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன், அதிபர் டிரம்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார். இச்சந்திப்பில், ஹிஸ்புல்லாவை ஆயுதங்களைக் கைவிடச் செய்வதற்கான திட்டங்கள், லெபனான் ராணுவத்திற்கான அமெரிக்க உதவி மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.