தமிழ்நாடு

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: நல்லகண்ணு, பாரதிராஜா உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல்!

தமிழகச் சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று காலை இரங்கல் தீர்மானங்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: நல்லகண்ணு, பாரதிராஜா உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல்!
TN Assembly
தமிழகச் சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று காலை இரங்கல் தீர்மானங்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு முறைப்படி தொடங்கியது. அவை கூடியதும், மறைந்த முக்கியத் தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் திரையுலகப் பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காகத் இரங்கல் குறிப்புகள் பேரவையில் வாசிக்கப்பட்டு, தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தலைவர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி

சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர்களான சி.ராமசுவாமி, தா.வீராசாமி, சி.சுவாமிநாதன், அ.க.ஆறுமுகம், பெ.கண்ணன், அ.நாஞ்சில் முருகேசன் ஆகியோரின் மறைவுக்கு முதலில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் சி.கு.ராமசாமி ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.

திரையுலகப் பிரபலங்களுக்கு இரங்கல்

அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து, தமிழ் திரையுலப் பிரபலங்களின் மறைவுக்கும் சட்டப்பேரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணித் திரைப்பட தயாரிப்பாளர்களான ஆர்.பி.சௌத்ரி, கே.ராஜன் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்குப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இரங்கல் தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தன.