தமிழ்நாடு

விஜயின் மூன்றாவது வாக்குறுதி ரெடி.. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் புதிய படை..

முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!

விஜயின் மூன்றாவது வாக்குறுதி ரெடி.. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் புதிய படை..
vijay initiate 3rd promise against drug
முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!

இதுகுறித்த விஷயம் அறிந்த காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். "முத்தைய தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளில் அப்போதைய காவல் துறை உயரதிகாரிகள் சிலர் அலட்சியம் காட்டினர். இதன் விளைவாக போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத ஊரே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தின் நிலை தற்போது அபாயகரமாக மாறியிருக்கிறது மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் உயர்ரக போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் வெகு எளிதாக கடத்தப் பட்டு கிராமங்களில்கூட அவை கிடைக்கின்றன.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவது என்பது இன்றைய தேதியில் போலீஸாருக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு போலீஸாரோ அல்லது பிற பிரிவுகளைச் சேர்ந்த போலிஸாரோ, தங்களின் அன்றாடப் பணிகளுக்கு இடையே போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்து வந்தாலும்கூட, முழுமையான தீர்வு கிடைப்பதில்லை.

இதற்கிடையே, அன்றாட நாளிதழ்களில் போதைப்பொருள் கடத்தல் குறித்தும் விற்பனையாளர்கள் கைது குறித்தும் செய்திகள் தவறாமல் வருவது முதல்வர் விஜய்யை பெரிதும் கவலைக்கொள்ளச் செய்திருக்கிறது. அதுபோலவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களாக இருப்பதாக வெளியாகும் செய்திகளும்கூட அவரை டென்ஷன் ஆக்கிவிடுகிறது.

முன்னதாக, முதலமைச்சராக விஜய் பதவியேற்ற கடந்த மே மாதம் 10ம் தேதி அவர் மூன்று வாக்குறுதிகளை செயல்படுத்த கையெழுத்திட்டார். அவற்றில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய இரண்டு வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டார். மூன்றாவது வாக்குறுதியான போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க 37 மாவட்டங்களில் காவல் நிலையங்கள், 9 மாநகராட்சிகளிலும் 28 காவல் நிலையங்கள் என மொத்தமாக 65 போதைப்பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும் என்பது மட்டுமே இன்றைய தேதி வரை பெண்டிங்.

அந்த வாக்குறுதியையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலுக்கு முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை, புழக்கத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அதிக அதிகாரம் கொண்ட, தனி அதிகாரி ஒருவரை நியமிப்பது தொடர்பாக டி.ஜி.பி மகேஷ்ருமார் அகர்வால் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அன்பு உளவுத்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் கலந்துரையாடிய டி.ஜி.பி., தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இவ்லாத வகையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரியை நியமித்து அவரது தலைமையின் கீழ் ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி.க்களை நியமித்து, மாநிலம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒரு திட்டத்தை தீட்டியிருக்கிறார். இதற்கு முதல்வர் விஜய்யும் ஒப்புதல் வழங்கிவிட்டார். கூடிய விரைவாகவே இந்தப் படை, மாநிலம் முழுவதும் அதிரடி வேட்டைகளில் இறங்கும்" என்றவர் தொடர்ந்து,

"கடந்த 2002க்கு முன்பு தமிழக காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளையும் உச்ச அதிகாரம் படைத்த டி.ஜி.பி அந்தஸ்தில் ஒரே ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிதான் நிர்வகித்து வந்தார். அந்த நடைமுறையை மாற்றி அதே ஆண்டில்தான் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பணியை செம்மைப்படுத்த கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்திலான அதிகாரி என தனியாக உயரதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். அதே அடிப்படையில்தான், போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தற்போது ஐ.ஜி. அந்தஸ்திலான உயரதிகாரி ஒருவரே மாநிலம் முழுவதும் கண்காணித்து வருவதை மாற்றி அவருக்கு மேல் ஒரு உயரதிகாரி நியமிக்கப்படவுள்ளார்.

இப்படியாக, கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்திலான அதிகாரி ஒருவரை நியமிப்பதில் முதல்வர் உத்தரவிட்டதற்கு ஏற்ப, 37 மாவட்டங்கள் 9 மாநகராட்சிகளை உள்ளடக்கி மொத்தமாக 65 போதைப்பொருட்கள் தடுப்பு படையை அமைப்பதற்கான பணிகளிலும் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் தனிக்கவனம் செலுத்திவருகிறார். இது தொடர்பான அதிரடி அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும். தொடர்ந்து, அதிரடி நடவடிக்கைகளும் தொடங்கும்.

எல்லாம் சரியாக நடந்தால், முதல்வரின் போதையில்லா தமிழகம் என்ற பெருங்கனவு, அடுத்தாண்டு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாகவே, 75 சதவிகிதத்திற்கு மேலாக நிறைவேற்றப்பட்டுவிடும். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் இதற்கு முன்பிருந்த முதல்வர்களைவிட முதல்வர் விஜய் கறாராக இருக்கிறார். போலீஸாருக்கு அவர் முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால், தனிப்படை போலீஸாரும் புதிய உத்வேகத்துடனே களமாட தயாராகி வருவதால் வரும் மாதங்களில் சட்டவிரோத கும்பல்களின் கொட்டம் முழுமையாக ஒடுக்கப்படுவது உறுதி" என்றார்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற ஐ.ஜி.ராமசுப்பிரமணியனிடம் பேசினோம். "போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் அரசியல் தலையீடு இருக்காது என்று முதல்வர் உறுதி கொடுத்திருப்பதால், காவல் துறை அலுவலர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். இதனால் மது, போதைப்பொருள் கடத்தல் குறைந்திருப்பதுடன், விற்பனையும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. போதையில்லா தமிழகம் என்ற முதல்வரின் கனவு விரைவில் சாத்தியமாகும்" என்றார் நம்பிக்கையுடன்

போதை ஒழிப்பிலும் தமிழ்நாடு முதலிடம் பிடிக்க வேண்டும்!

- குமுதம் செய்திகளுக்காக தாரை இளமதி.