தமிழ்நாடு

Driving Licence பெறுவது இனி Easy.. முதலமைச்சர் விஜய்யின் சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறையின் சேவைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Driving Licence பெறுவது இனி Easy.. முதலமைச்சர் விஜய்யின் சூப்பர் அறிவிப்பு!
Driving License
தற்போது நடைமுறையிலுள்ள வழக்கத்தின்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) அதிகாரியின் முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்டி தேர்ச்சி பெற்ற பிறகு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அஞ்சல் மூலமாக ஓட்டுநர் உரிமம் கிடைக்க 7 முதல் 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இனி அந்த நிலை மாறி, ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் (Digital Driving Licence) வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதேபோல, புதிதாக வாகனம் வாங்குபவர்கள் தங்களின் டிஜிட்டல் ஆர்.சி-யை (Digital RC) இணையவழியில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதிகள் வரும் செப்டம்பர் 15 முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளன.

போக்குவரத்துத் துறை சார்ந்த அனைத்துச் சேவைகளுக்கும் "எங்கும் பதிவு / உரிமம்" (Anywhere Registration / Licensing) என்னும் புதிய நடைமுறை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் ஆவணங்களை எளிதாகச் சரிபார்க்கும் வகையில் க்யூஆர் கோடு (QR code) ஸ்கேன் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், அசல் ஆவணங்கள் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ பொதுமக்கள் எந்தவித சிரமமுமின்றி மீண்டும் இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ள முடியும். ஓட்டுநர் உரிமத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து, உடனடிச் சேவையை உறுதி செய்யும் இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.