தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
DMK MLA Markandeyan
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜீ.வி.மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாகத் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் கடந்த ஜூலை 20-ஆம் தேதி ஜீ.வி.மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அவரைச் சிறையில் அடைக்கத் தூத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே, அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைத் தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மார்க்கண்டேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எச்.ஜான் சத்யனும் ஆஜராகி வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இனிமேல் இதுபோன்று பேசப்போவதில்லை எனத் தூத்துக்குடி நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களைத் தவிர்த்து, மற்ற நாட்களில் இரண்டு வாரங்களுக்குச் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்துள்ளார்.