தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அரசுக்கு எதிராக வாக்களிக்க பணம் கொடுத்து ஆதரவு திரட்ட முயற்சி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா, அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேரம் பேசியதாக மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்காக முதற்கட்டமாக ரூ.15 கோடி வழங்குவதாகவும் மன்னன் தெரிவித்ததாக முஸ்தபா கூறியுள்ளார். மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்த பிறகு கூடுதலாக ரூ.15 கோடி வழங்கப்படும் எனப் பேரம் பேசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன்படி மொத்தம் ரூ.30 கோடி வழங்க முன்வந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தப் பேரம் தொடர்பான தொலைபேசி உரையாடலுக்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் முஸ்தபா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, பி.எம். மன்னன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, இன்று அதிகாலை 6 மணி முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு பி.எம். மன்னனை போலீசார் கைது செய்தனர்.
யார் இந்த பி.எம். மன்னன்?
கைது செய்யப்பட்டுள்ள பி.எம். மன்னன் ஆரம்பத்தில் திமுகவில் செயல்பட்டு வந்தவர். மதுரை மாநகராட்சியின் துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளராக அறியப்பட்ட இவர், பின்னர் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
ஒரு தவெக எம்எல்ஏவுக்கு ரூ.30 கோடி பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரும், அதன் தொடர்ச்சியாக அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவமும் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் போலீசாரின் அடுத்தகட்ட விசாரணை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
LIVE 24 X 7









