சண்முகப்ரியாவை தொடர்ந்து மனைவியை டார்கெட் செய்த காவல்துறை… அன்பில் மகேஷ் வழக்கில் புதிய ட்விஸ்ட்!

சண்முகப்ரியாவை தொடர்ந்து மனைவியை டார்கெட் செய்த காவல்துறை… அன்பில் மகேஷ் வழக்கில் புதிய ட்விஸ்ட்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் கைதாகியுள்ள நிலையில், தற்போது அவருடைய மனைவியிடம் விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Author: Bhavani அரசியல்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக எழுந்துள்ள ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது மனைவி ஜனனியிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுவது இந்த வழக்கில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அன்பில் மகேஷுக்குத் தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணையும் நடத்தப்பட்டது. இதற்கிடையே, முன்ஜாமீன் கோரிய அவரது மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 26-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர்.

இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்தார். அதேசமயம், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 4-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மனைவி ஜனனியிடமும் விசாரணை?

அன்பில் மகேஷை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்தகட்டமாக அவரது மனைவி ஜனனியிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இந்த வழக்குடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க போலீசார் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே அன்பில் மகேஷ் வழக்கு தொடர்பாக சண்முகப்ரியா வீட்டில் சோதனை காவல்துறை நடத்தப்பட்டு நிலையில், தற்போது மகேஷின் மனைவியிடமும் விசாரணை செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.

அன்பில் மகேஷின் போலீஸ் காவல் விசாரணையில் வெளிவரும் தகவல்கள், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.