தியேட்டரில் ஜூஸ் குடிக்கிறீங்களா? PVR INOX-ல் நடந்த அதிர்ச்சி!

தியேட்டரில் ஜூஸ் குடிக்கிறீங்களா? PVR INOX-ல் நடந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள PVR INOX மல்டிபிளக்ஸ் திரையரங்கில்,வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்திய ஜூஸ் கப்புகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author: Bhavani இந்தியா

வைரலான வீடியோ... வெடித்த சர்ச்சை!

கடந்த நவம்பர் 5-ம் தேதி மிதில் குமார் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார். அதில், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஜூஸ் கப்புகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

பெங்களூருவின் தென்பகுதியில் உள்ள ஃபோரம் மாலில் செயல்படும் PVR INOX திரையரங்க ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்த டிஸ்போசபிள் கப்புகளையே மீண்டும் பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து, PVR INOX நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து பலரும் கேள்வி எழுப்பியதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அதிரடியாக ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை!

இந்தப் புகாரைத் தொடர்ந்து, கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் யு.டி. காதர், சம்பந்தப்பட்ட திரையரங்கில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதாகத் தெரிவித்தார்.

ஆய்வின்போது உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் குறிப்பிட்டார். மேலும், விதிமீறல்கள் காரணமாக PVR INOX திரையரங்கின் ஜூஸ் விற்பனை கவுன்டர் உடனடியாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெரிய நிறுவனமாக இருந்தாலும், சிறிய கடையாக இருந்தாலும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றுதான் என்று குறிப்பிட்ட அமைச்சர், உணவுப் பொருட்களைச் சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், உணவுப் பொருட்கள், பேக்கேஜிங் அல்லது வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் முறைகளில் சுகாதாரமற்ற நடைமுறைகள் இருப்பதைக் கண்டால், உணவுப் பாதுகாப்புத் துறையின் QR குறியீடு மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஃபோரம் மால் நிர்வாகம் விளக்கம்!

இந்தச் சம்பவம் தொடர்பாக PVR INOX நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. இருப்பினும், ஃபோரம் மால் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்புக் கோரியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிலில், PVR INOX குழுவினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் படம் பார்க்கச் செல்லும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும், சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.