இந்தியா

கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிவிட்ட வழக்கு...ராகுலுக்கு பறந்த நோட்டீஸ்!

கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிப்பட்ட வழக்கில், டெல்லி உச்சநீதிமன்றம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிவிட்ட வழக்கு...ராகுலுக்கு பறந்த நோட்டீஸ்!
rahul gandhi-supreme court notice

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (SIR) முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில், டெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது மூன்று மாதக் கர்ப்பிணிப் பெண் பத்திரிகையாளரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக எழுந்த புகார் தற்போது உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்றுள்ளது.

கடந்த அக்டோபர் 12-ம் தேதி, SIR பணிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் டெல்லியில் இருந்து உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அப்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ரிச்சா பராஷர் என்ற பெண் பத்திரிகையாளரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

சம்பவத்தின்போது தான் 11 வாரங்கள் மற்றும் 3 நாட்கள் கர்ப்பமாக இருந்ததாகக் குறிப்பிட்ட ரிச்சா பராஷர், ராகுல் காந்தி மற்றும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தார். மேலும், தனக்கு ஏற்பட்ட உடல் பாதிப்பு மற்றும் மன உளைச்சலுக்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

இந்த மனு தொடர்பாக, இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, பெண் பத்திரிகையாளர் அளித்துள்ள புகார் தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்மனுதாரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும், சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும், தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் ரிச்சா பராஷர் தனது மனுவில் முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்களின் விளக்கங்களும் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இருப்பினும், ராகுல் காந்தி பெண் பத்திரிகையாளரைத் தள்ளிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள புகாராகும்; அது தொடர்பான இறுதி முடிவு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.