இந்தியா

வெறும் 7 ருபாய் முதலீட்டில் கோடீஸ்வரியான பெண் ! பஞ்சாபில் நடந்த அதிசயம் !

வெறும் 7 ரூபாயில் வாங்கிய லாட்டரி சீட்டு, ஒரே இரவில் வாழ்க்கையை மாற்றும் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது; பஞ்சாபில் நடந்த இந்த ஆச்சரியச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வெறும் 7 ருபாய் முதலீட்டில் கோடீஸ்வரியான பெண் ! பஞ்சாபில் நடந்த அதிசயம் !
Punjab Woman Bought Just ₹7, Wins ₹1 Crore !

சில நேரங்களில் சிறிய முயற்சிகூட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அப்படியொரு ஆச்சரியமான சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. வெறும் ரூ.7 கொடுத்து லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட் மாவட்டம், கோட்கபுரா பகுதியைச் சேர்ந்தவர் பிம்லா தேவி. தொழிலாளியாகப் பணியாற்றும் ஒருவரின் மனைவியான இவர், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக ரயில்வே சாலைக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென லாட்டரி சீட்டு வாங்க வேண்டும் என்று தோன்றியுள்ளது. இதையடுத்து, ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டார் லாட்டரி கடையில் வெறும் ரூ.7 கொடுத்து ஒரு சீட்டை வாங்கியுள்ளார்.

அடுத்த நாள் மாலை லாட்டரி முடிவுகள் வெளியானபோது, பிம்லா தேவி வாங்கிய சீட்டுக்கு சிக்கிம் அரசின் லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்திருப்பது தெரியவந்தது. இந்தத் தகவலைக் கடையின் உரிமையாளர் நரேஷ் மோங்கா தெரிவித்ததும், குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். பின்னர் கடைக்குச் சென்ற அவர்களை வரவேற்ற உரிமையாளர், இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பரிசுத் தொகை குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும் என்று பிம்லா தேவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கவும் இந்தப் பணத்தைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். மேலும், குடும்பத்தினருடன் ஆலோசித்து குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத் தொழில் தொடங்குவது குறித்தும் திட்டமிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஆறு மாதங்களாக லாட்டரி கடையை நடத்தி வரும் நரேஷ் மோங்கா, தனது கடையில் ஏற்கெனவே பல லட்ச ரூபாய் பரிசுகள் கிடைத்துள்ளதாகவும், ரூ.1 கோடி பரிசு கிடைப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்துள்ளார். வெறும் ரூ.7-ல் தொடங்கிய இந்த அதிர்ஷ்டம், பிம்லா தேவி குடும்பத்தின் எதிர்காலத்தை மாற்றும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியின் முழு தகவலை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான செய்தியை பார்க்கவும் :