“அப்பா அம்மா என்னை விட்டுட்டுப் போகாதீங்க!” - கதறிய 3 வயது சிறுவன்...வைரலான வீடியோவால் நடந்த திருப்பம்!

“அப்பா அம்மா என்னை விட்டுட்டுப் போகாதீங்க!” - கதறிய 3 வயது சிறுவன்...வைரலான வீடியோவால் நடந்த திருப்பம்!

தெலங்கானாவில் தன்னை தத்தெடுத்த பெற்றோருடன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று மூன்று வயது சிறுவன் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைத்த நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவன் மீண்டும் வளர்த்த பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Author: Bhavani இந்தியா

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில், தன்னை வளர்த்த தத்தெடுத்த பெற்றோருடன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று 3 வயது சிறுவன் கத்தி கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சிறுவனின் தத்தெடுப்பு தொடர்பான சர்ச்சையும், அவன் அனுபவித்த மனவேதனையும் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தை இல்லாத தம்பதியரான சரிதா மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகியோர், தாயை இழந்த ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். இருவரும் சிறுவனை தங்களின் சொந்தக் குழந்தையைப் போலவே வளர்த்து வந்த நிலையில், அவர்களுக்கும் சிறுவனுக்கும் இடையே ஆழமான பாசப் பிணைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முறையான சட்டப்பூர்வ தத்தெடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி அதிகாரிகள் சிறுவனை தம்பதியரிடமிருந்து பிரித்து, குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து, சிறுவனைப் பார்ப்பதற்காகச் சரிதாவும் ஸ்ரீனிவாஸும் அந்த மையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, அவர்களைக் கண்ட சிறுவன் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளான். மேலும், அங்கு தங்க விருப்பமில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளான். சிறுவனை அணைத்துக்கொண்ட தம்பதியர், தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த காட்சிகளும் வெளியாகின.

இதற்கிடையே, இந்தத் தத்தெடுப்பு இந்து மரபுகளின்படி நடைபெற்றதாக சரிதாவும் ஸ்ரீனிவாஸும் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகியதாகவும், கடந்த 2026 அக்டோபர் 16ஆம் தேதி சிறுவனை அவர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.

ஆனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும் சிறுவனை தங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக தம்பதியர் குற்றம்சாட்டினர். தங்களிடமிருந்து பிரிக்கப்பட்டதால் சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தி சிறுவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் சிறுவனின் நிலை குறித்து கவலை தெரிவித்தனர். மூன்று ஆண்டுகளாகத் தன்னை வளர்த்தவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட சிறுவனின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவன் மீண்டும் சரிதா மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகியோரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மூன்று ஆண்டுகளாக தங்களுடன் வளர்ந்த சிறுவன் மீண்டும் தங்களிடம் வந்துள்ளதால் தம்பதியர் நிம்மதி அடைந்துள்ளனர்.