அரசியல்

தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்கள் 'நோ'... அரசியலில் புதிய திருப்பம்!

தவெக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி தொடர்பாக உடனடி முடிவு எடுக்க மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்கள் 'நோ'... அரசியலில் புதிய திருப்பம்!
தமிழகத்தில் ஆட்சி அமைந்த பிறகு, புதிய கூட்டணிகளை உருவாக்கும் முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இடைத்தேர்தலுக்கு முன்னதாக தங்களுடன் மேலும் சில கட்சிகள் இணைந்துள்ளன என்ற அரசியல் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் கூட்டணிக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், அந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், "அரசுக்கு 5 ஆண்டுகளும் ஆதரவு அளிப்போம். ஆனால் கூட்டணி தொடர்பாக தற்போது எந்த முடிவும் எடுக்க மாட்டோம்" என்று தெளிவுபடுத்தியுள்ளன. இதனால் தவெகவின் கூட்டணி வியூகத்திற்கு இது ஒரு பின்னடைவாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தலைமையிலான நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து மனு அளித்தனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், விவசாயிகள் பிரச்னை, மின்சார தட்டுப்பாடு, விவசாயக் கடன் தள்ளுபடி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

மேலும், வேலையின்மை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர் தேர்வாணையத் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்ததாக தெரிவித்தனர்.

கூட்டணி விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, வரும் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்துமென அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.