'யார் என்றெல்லாம் பார்க்கமாட்டேன், பதவியிலிருந்து தூக்கிவிடுவேன்...' - இது சமீபத்தில் முதல்வர் விஜய், அமைச்சர் ஒருவரிடம் அனலாக கக்கிய வார்த்தைகள். ஆம், சட்டமன்றத்தில் தி.மு.க. மீது காட்டிய கோபத்தை கொஞ்சமும் சூடு குறையாமல் தன் அமைச்சரவை சகாக்கள் மீதும் காட்டியிருக்கிறார் விஜய் என்பதுதான் தலைமைச் செயலகத்தில் ஹாட் டிபேட்!
தலைமைச் செயலகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் நபர் ஒருவரிடம் இதுகுறித்துப் பேசினோம். "அமைச்சர்கள் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும்கூட விரைவில் தங்கள் பண்புகளை வளர்த்துக்கொள்வார்கள் என்று முதல்வர் விஜய் நம்பினார். ஆனால், 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அந்த தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் அடாவடியில் ஈடுபட்டுவருவது விஜய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படி தாறுமாறான நடவடிக்கைகளில் முதலிடத்தில் இருப்பவர் அமைச்சர் சரத்குமார். பொது இடத்தில் வெளிப்படையாகவே போதைப் பவுடரை பயன்படுத்தியாக அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு விஜய்யை பெரிதும் வேதனை அடைய வைத்திருக்கிறது. 'தி.மு.க ஆட்சியாளர்களால்தான் போதைப் பொருள் கலாசாரமே தமிழகத்தில் அதிகரித்துவிட்டது என்று சட்டமன்றத்தில் நானே குற்றம்சாட்டியிருக்கிறேன். இப்படிப்பட்ட நேரத்தில் நமது அமைச்சரே அதில் சிக்கினால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? என சீனியர்களிடம் கோபத்தை காட்டியிருக்கிறார் விஜய்.
அதேபோல் பெண் அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, மணல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் அமைச்சர் பிரபு, குடும்ப உறவு தலையீட்டை அனுமதிக்கும் அமைச்சர்கள் கமலி, ரஞ்சித்குமார், ராஜீவ், விஜய் பாலாஜி, பந்தா பேர்வழியான ஸ்ரீநாத் மக்கள் சேவையில் ஆர்வமில்லாத குமார் என 10 அமைச்சர்களும் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பதவி இழக்க நேரிடும் என்றும் முதல்வர் எச்சரித்திருக்கிறார்” என்று தலைமைச் செயலகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் நபர் கூறுகிறார்.
LIVE 24 X 7









