அரசியல்

பள்ளி அனுமதி பெயரில் ₹100 கோடி மோசடி? திமுக பிரமுகர் அரசகுமார் கைது

கல்வி நிறுவன அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ₹100 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமான அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி அனுமதி பெயரில் ₹100 கோடி மோசடி? திமுக பிரமுகர் அரசகுமார் கைது
தி. மு.க.வுக்கு இது போதாத நேரம். கூட்டணிக் கட்சிகள் ஒரு பக்கம் சிதற, இன்னொரு பக்கம் ஊழல் வழக்குகளால் மாஜி அமைச்சர்கள் நடுக்கத்தில் இருக்கிறார்கள். அதை அதிகப்படுத்தும் விதமாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷூக்கு நெருக்கமான அரசகுமாரை 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் அதிரடியாக தூக்கி சிறையில் அடைத்துள்ளது போலீஸ்!

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் பேசினோம்... “புதுக்கோட்டை மாவட்டம், மருதந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். தி.மு.க. பிரமுகர். இவர் தனது சொந்த ஊரில் இருந்துக்கொண்டே புதிதாக கல்வி நிறுவனம் தொடங்குபவர்களுக்கு அனுமதி பெற்றுத் தரும் வேலைகளில் ஈடுபடத் துவங்கினார். தொடர்ந்து 1991ல் சென்னைக்கு வந்தவர், ஜெயலலிதாவின் ஆட்சியில் சசிகலாவின் உறவுகளிடம் அறிமுகமாகியிருக்கிறார். அவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பலமாகவே, தமிழ்நாடு நர்சரி பள்ளிகள் சங்கத்தை தொடங்கினார். அந்த செல்வாக்கில் சில கல்வி நிறுவனங்களை குமாரே தொடங்கியிருக்கிறார். மேலும், சில தமிழ் திரைப்படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்ததுடன் சொந்தமாக ஒன்றிரண்டு படங்களையும் தயாரித்திருக்கிறார்.

'திராவிட விழிப்புணர்ச்சி கழகம்' எனும் கட்சியையும் நடத்தி வந்த அவர் 2010ம் ஆண்டு அகில இந்திய தேசிய ஃபார்வர்டு பிளாக்' என கட்சியின் பெயரை மாற்றினார். நியூமராலஜியின்படி தனது பெயருக்கு முன் 'அரச' என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொண்டார். தனது கட்சி எடுபடாததால், 2015ல் அதை பா.ஜ.க.வுடன் இணைத்தார். பணத்தை அள்ளி வீசி செலவு செய்ததால் துணைத்தலைவர் பதவியும் அவருக்குக் கிடைத்தது.

இந்த நிலையில்தான் 2019ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினை அரசகுமார் புகழ்ந்து பேச, அதனால் பா.ஜ.க.வைவிட்டு நீக்கப்படார். இதையடுத்து தி.மு.க.வில் ஐக்கியமானார். சில நாட்களிலேயே தி.மு.க. செய்தித் தொடர்பு துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2021ல் தி.மு.க ஆட்சியை பிடித்தது. அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரோடு பசையாக ஒட்டிக்கொண்டார் அரசகுமார்.

ஏற்கெனவே கல்வித்துறை அதிகாரிகள் அத்துப்படி. இதில் அமைச்சர் வேறு நெருக்கம். அவ்வளவுதான். புதிதாக கல்வி நிறுவனங்களை தொடங்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர்கள் அரசகுமாரின் வட்டத்துக்குள் வந்தனர்.

கல்வி நிறுவனங்களை துவங்க அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு, அமைச்சரின் பங்கு என்ன என தனித்தனியாக கணக்குப் போட்டு தனி ரூட்டில் வசூல் வேட்டையை நடத்தினார் அரசகுமார். புதிய சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள் துவக்கம், தனியார் பள்ளிகளுக்கு தடையில்லாச் சான்றிதழ்கள் வினியோகம் என பள்ளிகள் தொடர்பான வசூல்களுக்கு சென்னை தி.நகரில் தனி அலுவலகமே நடத்தினார் அரசகுமார். மாஜி எம்.எல்.ஏ. முத்துக்குமார் மேற்பார்வையில் இந்த அலுவலகம் இயங்கியது. இதனால் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக அவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதுதவிர அன்பில் மகேஷ் மனைவியின் பள்ளித்தோழியுடன் இணைந்து கோட்டூர்புரத்தில் ஒரு அலுவலகத்தையும் அரசகுமார் நடத்தி வந்தார். அங்குதான் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் விவகாரங்கள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதிலும் பணம் கொட்டியிருக்கிறது. ஆனால் சேரும் பணத்தை முழுமையாக அரசகுமாரே வைத்துக்கொள்வதில்லை. அனைவருக்கும் சரியாக பங்கு பிரித்துக் கொடுத்திருக்கிறார்.

பள்ளிகள் தொடங்க அனுமதி மற்றும் பல்வேறு விவகாரங்களை தாண்டி 10 முதல் 15 வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரத்தை பெற்றுத் தரும் முயற்சியிலும் இறங்கினார். இதில்தான் கணக்கில்லாத பணம் அவருக்கு கொட்டியது. அதோடு அங்குதான் அவர் வம்பிலும் சிக்க தொடங்கினார். இதற்கு நடுவே, பள்ளி உரிமையாளர்கள் நடத்தி வந்த பல்வேறு சங்கங்களின் தலையீட்டால் அரசு நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டது. இதை தவிர்க்க ஆறு சங்கங்களை ஒன்றாக்கியது அரசு. இதற்கான விழா, அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தலைமையில் நடந்தது. அப்போது 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற புதிய சங்கத்தை உருவாக்கி அதற்கு தலைவராக அரசகுமாரையே நியமித்தார் அன்பில் மகேஷ்.

ஆனால் இதுவரை சங்கத்திற்கான அரசின் அங்கீகாரத்தை பெற அரசகுமார் எந்த வழியிலும் முயற்சிக்கவில்லை. இதுதான் இவருக்கு இப்போது வினையாக வந்து நிற்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, ஆட்சி மாறியதும் பல்வேறு வேலைகளுக்காக அரசகுமாரிடம் பணம் கொடுத்து காத்திருந்தவர்கள் அவரை ரவுண்டு கட்டினர். இதனால் பவர்ஃபுல் அமைச்சர் மூலம் தவெக. பக்கம் சேர வலை வீசினார். ஆனால் இவரைப் பற்றி முன்கூட்டியே தகவல் சேகரித்து வைத்திருந்த ஜான் ஆரோக்கியசாமி டீம், இவர் பற்றிய ரிப்போர்ட்டை தலைமைக்கு அனுப்ப, த.வெ.க.வில் அரசகுமார் நிராகரிக்கப்பட்டார்.

இந்த நிலையில்தான் வேறு வழியின்றி அவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தகுந்த ஆதாரங்களோடு புகார் தெரிவித்தனர். அந்தப் புகார்களை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை ஜூன் 27ம் தேதி இரவு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்" என்றார்கள்.

வழக்கின் விசாரணை அதிகாரி கமல் மோகன் நம்மிடம், "இதுவரை 29 பள்ளி உரிமையாளர்களிடம் விசாரித்துதான் அரசகுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததை கண்டுபிடித்தோம். விசாரணை தொடரும்போது இன்னும் பல தகவல்கள் வெளிவரும்" என்றார்.

சட்டம் கடமையை செய்யட்டும்!