அரசியல்

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்.. போலீஸ் கஸ்டடியில் அதிமுக பிரமுகர்!

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் அதிமுக பிரமுகர் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்.. போலீஸ் கஸ்டடியில் அதிமுக பிரமுகர்!
Arrest
தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேரைச் சென்னை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தத் கைது நடவடிக்கையில் திமுகவினரைத் தொடர்ந்து தற்போது அதிமுக பிரமுகர் ஒருவரும் சிக்கியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் விஜய்யின் ஆட்சியை கவிழ்ப்பதற்காகத் தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில், கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சதியின் பின்புலமாக திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைதான நரேஷ் என்பவரை அசோக்குமார் சென்னையில் நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். செந்தில் பாலாஜியும் அவரது தம்பியும் கொடுத்த அறிவுரையின் பேரிலேயே, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேசியதாகக் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள திருவல்லிக்கேணி போலீசார், இன்று மேலும் 4 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சீனிவாசன் என்பவர் நாடார் பாதுகாப்பு பேரவையின் மாநில தலைவராகவும், அதிமுக பிரமுகராகவும் வலம் வந்தவர் என்பது அம்பலமாகியுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், தவெக எம்.எல்.ஏ-வை மிரட்டிய முக்கியக் குற்றவாளியான 'IPDS' திருநாவுக்கரசுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

இதுவரை திமுக பிரமுகர்கள் மட்டுமே இந்த வழக்கில் கைதாகி வந்த நிலையில், தற்போது அதிமுகவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது இந்தச் சதியில் இரு கட்சிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வழக்கில் மேலும் பல முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.