சினிமா

அரசியலுக்கு வர எனக்கு தகுதி இருக்கிறதா? ரசிகர்களிடம் கருத்து கேட்கும் ராகவா லாரன்ஸ்!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு, அவர் வீடியோ மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

அரசியலுக்கு வர எனக்கு தகுதி இருக்கிறதா? ரசிகர்களிடம் கருத்து கேட்கும் ராகவா லாரன்ஸ்!
Raghava Lawrence
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு, அவர் வீடியோ மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் களம் குறித்துப் பரவிய செய்திகளுக்கு ஜூன் 11-ஆம் தேதியே விளக்கமளிக்க லாரன்ஸ் திட்டமிட்டிருந்தார். எனினும், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு காரணமாக ஒரு நாள் தாமதமாக இன்று தனது அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்தின் அரசியல் வருகை அறிவிப்பின் போது தானும் அரசியலுக்கு வர விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

"கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே" என்ற வாசகத்துடன் தனது பேச்சைத் தொடங்கிய ராகவா லாரன்ஸ், உழைப்பவர்களுக்கே உண்மையான பலன் கிடைக்கும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் விவரித்தார். திருச்சி கிழக்குத் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்றால் முதலில் அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டுப் போராட்டக் களம் மற்றும் தனது சமூகச் சேவைகளே தன் அரசியல் சிந்தனைக்கு அடித்தளமிட்டதாகக் கூறினார்.

ஆரம்பத்தில் ரஜினிகாந்த் அரசியல் வருகையை அறிவித்தபோது தானும் அவருடன் பயணிக்க விரும்பியதாகவும், ஆனால் தனது தாயார் "அரசியல் ஒரு சாக்கடை" எனக் கூறி அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் லாரன்ஸ் குறிப்பிட்டார்.

கொரோனா சூழலால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தபோது தான் ஏமாற்றமடைந்ததாகக் கூறிய லாரன்ஸ், அதன் பிறகு தனது நண்பரான விஜய் அரசியல் பயணத்தைத் தொடங்கியபோது அவருக்கு ஆதரவாக வேலை செய்ய ஆரம்பித்ததாகத் தெரிவித்தார். விஜய்யின் கடின உழைப்பும், சமீபத்திய தேர்தல் முடிவுகளும் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட லாரன்ஸ், "விஜய் எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்" என்று கூறி தனது தாயாரே தற்போது தன்னை அரசியலுக்கு வர அனுமதித்துவிட்டதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தன் தாய்க்கு நிகராகத் தான் மதிக்கும் ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை வைத்துள்ள லாரன்ஸ், "நான் அரசியலுக்கு வரலாமா? அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? என்பதை உங்களது கருத்துக்கள் மூலம் எனக்குத் தெரியப்படுத்துங்கள்" என்று கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.