புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தவெக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு முதலமைச்சரை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாகப் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் மற்றும் திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூரில் தவெகவினர் சார்பில் முதலமைச்சருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில், முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட தவெக செயலாளருமான சி. விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு புதுக்கோட்டை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, முகமது பர்வேஷ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, நவாஸ் கனி, துரை வைகோ உள்ளிட்டோரும் அவரை வரவேற்றனர்.
தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய்க்குக் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரியப் பயிர் வகைகள், முந்திரி மற்றும் பல்வேறு தானிய வகைகளை அவர் பார்வையிட்டார்.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவடைந்த அரசு திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். குறிப்பாக, ரூ.23 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும், ரூ.11.72 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, 104 பயனாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், வங்கிக் கடன் உதவிகள், டிராக்டர்கள், வேளாண் கருவிகள், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மாவட்டந்தோறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் விஜய்யின் புதுக்கோட்டை பயணம், அப்பகுதி மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
LIVE 24 X 7








