தமிழ்நாடு

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ? வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கும், பல பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ? வானிலை மையம் அலர்ட் !
Tamil Nadu Weather: Rain Alert Today !

தமிழ்நாட்டில் இன்று (அக்.3) ஒருசில மாவட்டங்களில் மிதமான மழையும், பெரும்பாலான பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

6 மாவட்டங்களில் மிதமான மழை :

இன்று திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் :

தென் தமிழகத்தை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும், தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 5.8 முதல் 7.6 கி.மீ. உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை :

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகலாம். தென் தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும்.

சென்னை வானிலை :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.